சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு 4 லட்சம் பேர் பயணம்: அமைச்சர் சிவசங்கர் தகவல்
சென்னையில் இருந்து சொந்த ஊர்களுக்கு 4 லட்சம் பேர் பயணம் செய்திருப்பதாக அமைச்சர் சிவசங்கர் தெரிவித்தார்.
தாம்பரம்,
பொங்கல் பண்டிகையையொட்டி சென்னையில் இருந்து வெளி்யூர்களுக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டது. தாம்பரம் ரெயில் நிலைய பஸ் நிலையத்தில் உள்ள சிறப்பு பஸ் நிலையத்தை தமிழக போக்குவரத்து துறை அமைச்சர் சிவசங்கர் ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
சென்னையில் இருந்து வெளியூர்களுக்கு கடந்த 3 நாட்கள் சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன. பொங்கல் பண்டிகைக்காக சென்னையில் இருந்து இதுவரை 4 லட்சம் பயணிகள் சொந்த ஊர்களுக்கு பயணித்திருக்கிறார்கள். காணும் பொங்கல் அன்று சென்னையில் மக்கள் பொழுதுபோக்குக்காக பல்வேறு பகுதிகளுக்கு செல்வதற்கும் 450 சிறப்பு பஸ்கள் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது. பொங்கல் பண்டிகை முடிந்து சென்னை திரும்பி வருபவர்களின் வசதிக்காக 18-ந் தேதி அதிகாலையிலே 125 சிறப்பு பஸ்கள் இயக்கப்படும் என்று அவர் கூறினார்.
தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை சார்பில் மதுரவாயல் அடுத்த வானகரம் சுங்கச்சாவடி அருகே நடந்த சாலை பாதுகாப்பு வாரம் மற்றும் தூய்மை வார விழாவையும் அமைச்சர் சிவசங்கர் கொடி அசைத்து தொடங்கி வைத்தார்.