மானாமதுரை அருகே வாளால் வெட்டுவோம் என மிரட்டி வடமாநில இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 4 பேர்


மானாமதுரை அருகே வாளால் வெட்டுவோம் என மிரட்டி வடமாநில இளம்பெண்ணை பலாத்காரம் செய்த 4 பேர்
x

தனியாக தங்கி இருந்த வடமாநில பெண்ணின் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்து வாளால் வெட்டுவோம் என மிரட்டி 4 வாலிபர்கள் அந்த பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

சிவகங்கை

மானாமதுரை

தனியாக தங்கி இருந்த வடமாநில பெண்ணின் வீட்டுக்குள் நள்ளிரவில் புகுந்து வாளால் வெட்டுவோம் என மிரட்டி 4 வாலிபர்கள் அந்த பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்த கொடூர சம்பவம் நடந்துள்ளது.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது:-

வடமாநில இளம்பெண்

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை அருகே உள்ள ஒரு செங்கல் சூளையில், ஒடிசா மாநிலத்தை சேர்ந்த 30 வயது இளம்பெண் வேலை பார்த்து வருகிறார். இவருக்கு 2 ஆண் குழந்தைகள் உள்ளனர். அந்த பெண்ணின் கணவர் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். குழந்தைகள் இருவரும் ஒரு விடுதியில் தங்கி படித்து வருகின்றனர். இதனால் இளம்பெண் மட்டும் செங்கல்சூளை பகுதியில் குடிசை வீட்டில் தனியாக தங்கி இருந்தார்.

நேற்று முன்தினம் நள்ளிரவில் அந்த பெண் தூங்கி கொண்டிருந்தார். இதை அறிந்த மானாமதுரை அருகே உள்ள தெக்கூர் கிராமத்தை சேர்ந்த ரஞ்சித், முகேஷ், கஜா, அருண் ஆகிய 4 வாலிபர்கள் அங்கு வந்துள்ளனர்.

பாலியல் பலாத்காரம்

இந்த சத்தம் கேட்டு அந்த பெண் கண் விழித்து பார்த்தபோது, அந்த 4 பேரும் நின்றிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து கூச்சலிட்டார். இதையடுத்து அவர்கள் வாளை காட்டி வெட்டிக்கொல்வோம் என அந்த பெண்ணை மிரட்டினர்.

பின்னர் 4 பேரும் அந்த பெண்ணை கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது. 4 பேரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர்.

பாதிக்கப்பட்ட அப்பெண் இதுகுறித்து மானாமதுரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

சூப்பிரண்டு விசாரணை

இதுகுறித்து அறிந்ததும் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அரவிந்த் மற்றும் போலீஸ் அதிகாரிகள் நேரில் வந்து தீவிர விசாரணை நடத்தினர். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து 4 வாலிபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

மேலும் இவர்களுக்கு உடந்தையாக இருந்ததாக கீழப்பசலை கிராமத்தை சேர்ந்த ஆதி என்பவரிடமும் தீவிர விசாரணை நடந்து வருகிறது.

வடமாநில இளம்பெண் 4 வாலிபர்களால் கூட்டாக பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட கொடூர சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story