திண்டுக்கல்லில் கூடுதல் கட்டணம் வசூலித்த 4 ஆம்னி பஸ்கள் பறிமுதல்


திண்டுக்கல்லில் கூடுதல் கட்டணம் வசூலித்த 4 ஆம்னி பஸ்கள் பறிமுதல்
x
தினத்தந்தி 20 Oct 2023 9:30 PM GMT (Updated: 20 Oct 2023 9:30 PM GMT)

சென்னையில் இருந்து பழனி, தேனிக்கு வந்த பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 4 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திண்டுக்கல்

சென்னையில் இருந்து பழனி, தேனிக்கு வந்த பயணிகளிடம் கூடுதல் கட்டணம் வசூலித்த 4 ஆம்னி பஸ்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

கூடுதல் கட்டணம்

ஆயுத பூஜை, விஜயதசமி விடுமுறையுடன் இன்றும் (சனிக்கிழமை), நாளையும் (ஞாயிற்றுக்கிழமை) சேர்த்து தொடர்ச்சியாக 4 நாட்கள் விடுமுறை தினங்கள் ஆகும். இதையொட்டி வெளியூர்களில் வசிப்பவர்கள், வேலை செய்பவர்கள் சொந்த ஊருக்கு சென்ற வண்ணம் உள்ளனர். இதற்காக ரெயில்களில் பலர் ஏற்கனவே முன்பதிவு செய்து இருந்தனர். இதுதவிர அரசு போக்குவரத்து கழகம் சார்பில் இயக்கப்படும் சிறப்பு பஸ்களிலும் மக்கள் செல்கின்றனர்.

ஆனால் ஒரே நேரத்தில் லட்சக்கணக்கான மக்கள் வெளியூர் பயணம் மேற்கொள்வதால் ரெயில், பஸ்களில் இடம் கிடைக்காத சூழல் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ஆம்னி பஸ்களில் பயணிக்க வேண்டிய நிலை ஏற்படுகிறது. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலிப்பதை தடுக்க வேண்டும் என்று போக்குவரத்து ஆணையர் உத்தரவிட்டார்.

4 ஆம்னி பஸ்கள்

இதைத் தொடர்ந்து திண்டுக்கல் வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமையில் மோட்டார் வாகன ஆய்வாளர்கள் இளங்கோ, சண்முகஆனந்த், சிவக்குமார், கருப்புசாமி ஆகியோர் திண்டுக்கல்லில் பழனி மற்றும் வத்தலக்குண்டு புறவழிச்சாலைகளில் நேற்று அதிகாலையில் ஆம்னி பஸ்களில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். மேலும் ஆம்னி பஸ்களுக்கு டிக்கெட் முன்பதிவு செய்யப்படும் செயலிகளில் கட்டணத்தை ஆய்வு செய்தனர்.

அதில் சென்னையில் இருந்து பழனி, தேனிக்கு சென்ற 4 பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூலித்தது தெரியவந்தது. இதைத் தொடர்ந்து 4 ஆம்னி பஸ்களையும் அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இதேபோல் வருகிற 25-ந்தேதி காலை வரை தினமும் ஆம்னி பஸ்களில் கூடுதல் கட்டணம் தொடர்பாக சோதனை நடத்தப்படும் என்று அதிகாரிகள் கூறினர்.


Next Story