தொழிலாளி கொலையில் தீயணைப்பு வீரர் உள்பட 4 பேர் கைது
தொழிலாளி கொலையில் தீயணைப்பு வீரர் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
புதூர்
மதுரை ஒத்தக்கடை அருகே திருமோகூர் பெருமாள் நகரை சேர்ந்த கட்டுவாஒலி (வயது 39). தொழிலாளி. கட்டுவா ஒலியின் மீது கடந்த 2010-ம் ஆண்டு கொலை வழக்கு நிலுவையில் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒத்தக்கடை சரோஜினி தெருவில் உள்ள வீட்டு மாடியில் தலையில் பலத்த காயங்களுடன் கட்டுவா ஒலி கொலை செய்யப்பட்டு கிடந்தாா். இது குறித்து அறிந்த ஒத்தக்கடை இன்ஸ்பெக்டர் சுகுமாறன், சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா மற்றும் போலீசார் இச்சம்பவம் குறித்்து விசாரணை நடத்தினர். விசாரணையில் கட்டுவா ஒலி தனது நண்பர்களான ஒத்தக்கடை பகுதியை சேர்ந்த மோகன்ராஜ் (25), மணிக்குமார் (27), கட்டையன் என்ற கிருஷ்ணமூர்த்தி (25), சிவ கிருஷ்ணன் (28) ஆகிய 4 பேருடன் மது அருந்தியதாகவும் அப்போது ஏற்பட்ட தகராறில் நான்கு பேரும் சேர்ந்து கட்டுவா ஒலியை கொலை செய்ததாகவும் போலீசார் விசாரணையில் தெரிய வந்தது. இதைத்தொடர்ந்து போலீசாா் மேற்படி 4 பேரையும் கைது செய்தனர். இதில் கைதான சிவகிருஷ்ணன் என்பவர் சிங்கம்புணரியில் தீயணைப்பு படை வீரராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.