மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 40 பேர் கைது


மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 40 பேர் கைது
x

மத்திய அரசை கண்டித்து மறியலில் ஈடுபட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் 40 பேர் கைது செய்யப்பட்டனர்.

கரூர்

விலைவாசி உயர்வு, வேலையில்லா திண்டாட்டம், கைத்தறி உள்பட சிறு, குறு, தொழில்கள் முடக்கம், தொழிலாளர், விவசாயிகள் விரோத சட்டங்கள், வரலாறு காணாத ஊழல்கள், பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை, சிறுபான்மை மற்றும் பழங்குடியின மக்களை ஒழித்து கட்டும் முயற்சி, அரசியல் அமைப்பு சட்டத்தை அவமதித்தல், மாநில உரிமைகளை பறித்தல், 'நீட்' தேர்வு, சனாதனத்தை முன்னிறுத்தி ஆதிக்கத்தை நிலை நிறுத்தும் நடவடிக்கைகள் என பா.ஜனதா அரசை கண்டித்து மாநிலம் தழுவிய மறியல் போராட்டம் நடத்துவதாக இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி கரூர் தலைமை தபால் அலுவலகம் முன்பு மாவட்ட இந்திய கம்யூனிஸ்டு கட்சி சார்பில் நேற்று சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது.

இந்த போராட்டத்திற்கு கரூர் மாவட்ட செயலாளர் நாட்ராயன் தலைமை தாங்கினார். அப்போது மத்திய அரசை கண்டித்து இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் கோஷங்களை எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். தொடர்ந்து தலைமை தபால் அலுவலகம் முன்பு சாலையில் அமர்ந்து மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவர்களை கைது செய்து போலீஸ் வேனில் அழைத்து சென்றனர். இதில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்த 3 பெண்கள் உள்பட 40 பேரை போலீசார் கைது செய்து மண்டபத்தில் அடைத்தனர். பின்னர் அவர்கள் மாலையில் விடுவிக்கப்பட்டனர்.


Next Story