ஸ்கூட்டரில் சென்ற பெண்ணிடம் 4½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு

4½ பவுன் தங்க சங்கிலி பறிப்பு
ஈரோடு சி.எஸ்.நகர் பகுதியை சேர்ந்தவர் அஜித்குமார் (வயது 47). சாயப்பட்டறை உரிமையாளர். இவருடைய மனைவி பிருந்தா (வயது 43). இவர் தனது ஸ்கூட்டரில் ஈ.பி.பி.நகர் பகுதியில் உள்ள ஒரு டெய்லர் கடைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து அவர் வீடு திரும்பினார். ஈரோடு ஈ.பி.பி.நகர் பி.பி.கார்டன் பகுதியில் ஸ்கூட்டரில் சென்று கொண்டு இருந்தார். அப்போது, 2 பேர் மோட்டார் சைக்கிளில் அவரை பின் தொடர்ந்து வந்தனர்.
அருகில் வந்ததும் மோட்டார் சைக்கிளில் பின்னால் அமர்ந்திருந்த நபர் பிருந்தாவின் கழுத்தில் கிடந்த 4½ பவுன் தங்க சங்கிலியை வெடுக்கென பறித்தார். இதனால் அவர் திருடன் திருடன் என கூச்சலிட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வருவதற்குள் மர்ம நபர்கள் 2 பேரும் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பிச்சென்றனர். இதைத்தொடர்ந்து பிருந்தா இதுகுறித்து ஈரோடு வீரப்பன்சத்திரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, தங்க சங்கிலியை பறித்து சென்ற மர்ம நபர்கள் 2 பேரையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.