குமரியில் பொதுமக்கள் தவறவிட்ட 405 செல்போன்கள் உரியவர்களிடம் ஒப்படைப்பு
குமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட 405 செல்போன்களை உரியவரிடம் போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் ஒப்படைத்தார்.
நாகர்கோவில்:
குமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட 405 செல்போன்களை உரியவரிடம் போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் ஒப்படைத்தார்.
செல்போன் கண்டுபிடிப்பு
குமரி மாவட்டத்தில் பொதுமக்கள் தவறவிட்ட செல்போன்களை கண்டுபிடித்து அவர்களிடம் ஒப்படைக்கும் நிகழ்ச்சி நாகர்கோவிலில் உள்ள மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று நடந்தது. நிகழ்ச்சியில் நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவேஷ்குமார் கலந்துகொண்டு தவறவிட்டவர்களின் செல்போனை மீண்டும் அவர்களிடம் ஒப்படைத்தார்.
பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
குமரி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களிலும் செல்போன் தொலைந்து போனதாக பல்வேறு புகார்கள் வந்தன. அந்த புகார்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத் மேற்பார்வையில் சைபர் கிரைம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி செல்போன்களை கண்டுபிடிக்கும் பணியில் ஈடுபட்டனர். அதன் பலனாக சுமார் ரூ.56 லட்சம் மதிப்புள்ள 405 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது. இந்த செல்போன்கள் சுமார் 6 மாத காலத்தில் விசாரணை நடத்தி கண்டுபிடிக்கப்பட்டு உள்ளது.
1,900 புகார்கள்
கடந்த ஒரு ஆண்டில் மட்டும் செல்போன் தொலைந்து போனதாக 1,900 புகார்கள் பெறப்பட்டன. அதில் 740 செல்போன்கள் ஏற்கனவே கண்டுபிடிக்கப்பட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்பட்டு விட்டது. தற்போது 405 செல்போன்கள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கின்றன. மீதமுள்ள செல்போன்களையும் கண்டுபிடிக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. இந்த செல்போன்களை கண்டுபிடித்த சைபர் கிரைம் போலீசாருக்கு பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.
பொதுமக்கள் தெரியாத நபர்களிடம் இருந்து செல்போன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். ஏன் எனில் அது குற்றச் சம்பவத்தில் சம்பந்தப்பட்ட செல்போனாக இருக்கலாம். பொதுமக்கள் செல்போனை தவறவிட்டாலோ அல்லது திருடப்பட்டாலோ அருகில் உள்ள போலீஸ் நிலையத்தில் உடனடியாக மனு அளிக்க வேண்டும். இல்லை எனில் (https://eservices.tnpolice.gov.in) என்ற போலீஸ் இணையதளத்தில் தங்களது புகாரை பதிவு செய்யலாம்.
கஞ்சா மற்றும் குட்கா தொடர்பாக ஏராளமான வழக்குகள் பதிவு செய்யப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் பல வழக்குகளில் தொடர்புடையவர்களின் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு இருக்கிறது. தமிழகத்திற்கு ஆந்திராவில் இருந்து கஞ்சா சப்ளை செய்யப்படுவதாக தெரிய வந்துள்ளது. அதன்படி விசாரணை நடத்தி வருகிறோம். சிலரை எல்லையில் வைத்து பிடித்துள்ளோம். மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் 450 கிலோ கஞ்சாவும், அம்பாசமுத்திரத்தில் 100 கிலோ கஞ்சாவும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இதில் சம்பந்தப்பட்டவர்கள் கைது செய்யப்பட்டு இருக்கிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
போலீசாருக்கு பாராட்டு
அதைத் தொடர்ந்து காணாமல் போன செல்போன்களை கண்டுபிடித்த சைபர் கிரைம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சம்சீர் மற்றும் போலீசார் துரைசிங், அதீஸ் ஆகியோரை டி.ஐ.ஜி. பிரவேஷ் குமார் பாராட்டி பரிசு வழங்கினார். மேலும் கோட்டார், குலசேகரம், பொருளாதார குற்றப்பிரிவு உள்ளிட்ட போலீஸ் நிலையங்களுக்கு ஆன்லைனில் ஆலோசனை கூட்டம் நடத்துவதற்காக வெப் கேமரா மற்றும் மைக் ஆகியவற்றையும் அவர் வழங்கினார்.
நிகழ்ச்சியில் போலீஸ் சூப்பிரண்டு ஹரிகிரண் பிரசாத், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ராஜேந்திரன், துணை சூப்பிரண்டுகள் தங்கராஜ், நவீன்குமார், இன்ஸ்பெக்டர் பெர்னார்டு சேவியர் உள்பட பலர் உடன் இருந்தனர்.