தமிழ்நாட்டுக்கு ரூ.4,230 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீடு - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்


தமிழ்நாட்டுக்கு ரூ.4,230 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீடு - நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன்
x

தமிழ்நாட்டுக்கு ரூ.4,230 கோடி ஜி.எஸ்.டி. இழப்பீடு விடுவிக்கப்பட்டு உள்ளதாக நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டம்

ஜி.எஸ்.டி. கவுன்சிலின் 49-வது கூட்டம் டெல்லி விஞ்ஞான பவனில் மத்திய நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தலைமையில் நடைபெற்றது. ராஜாங்க மந்திரி பங்கஜ் சவுத்ரி முன்னிலை வகித்தார். அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் நிதி மந்திரிகள், துறை செயலாளர்கள் கலந்து கொண்டனர்.

தமிழ்நாட்டில் இருந்து நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன், நிதித்துறை கூடுதல் தலைமைச்செயலாளர் என்.முருகானந்தம், வணிகவரித்துறை ஆணையர் தீரஜ்குமார் ஆகியோர் கலந்து கொண்டனர்

ரூ.4,230 கோடி இழப்பீடு

பின்னர் 2020-2021-ம் ஆண்டுக்கான ஜி.எஸ்.டி. இழப்பீடு தொடர்பான அறிவிப்புகள் கூட்டத்தில் வெளியிடப்பட்டன. தமிழ்நாட்டுக்கும் இழப்பீடு அறிவிக்கப்பட்டது.

இது குறித்து தமிழ்நாடு நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிருபர்களிடம் கூறியதாவது:-

இந்த கூட்டம் மதுரையில்தான் நடைபெறுவதாக இருந்தது. ஆனால் ஜனாதிபதி வருகை மற்றும் வழிபாட்டு வாரம் என்பதால் விருந்தினர்களுக்கான விருந்தோம்பலை சிறப்பாக செய்ய முடியாது என கூறி இந்த கூட்டத்தை டெல்லியில் நடத்துமாறும், அடுத்த கூட்டத்தை மதுரையில் வைத்துக்கொள்ளலாம் என்றும் நிதி மந்திரியிடம் கூறினேன். அதன் அடிப்படையில்தான் டெல்லியில் கூட்டம் நடைபெற்றது.

கூட்டத்தில் ஜி.எஸ்.டி. இழப்பீடு நிலுவைத்தொகை அறிவிக்கப்பட்டது. தமிழ்நாட்டுக்கு 2020-2021-ம் ஆண்டுக்கான தணிக்கை அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டதன் அடிப்படையில் சுமார் ரூ.4,230 கோடி விடுவிக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று 2021-2022 மற்றும் 2022-2023-ம் ஆண்டில் 3 மாதங்களுக்கு நிலுவைத்தொகை வரவேண்டும்.

தீர்ப்பாயம்

மேல்முறையீட்டு தீர்ப்பாயம் பற்றி கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. அதற்காக அமைக்கப்பட்ட துணைக்குழுவின் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. இதனை பல மாநிலங்கள் ஏற்கவில்லை. 13 மாநிலங்கள் மாநில அளவில் தீர்ப்பாயம் வேண்டும் என கேட்டுள்ளன. தீர்ப்பாயங்கள் தொடர்பான பல திருத்தங்கள் ஏற்கப்பட்டு உள்ளன. இன்னும் சில புள்ளிவிவரங்கள் சேர்க்கப்பட்டு ஒப்புதல் அளிக்கப்படும் நிலை உள்ளது. தீர்ப்பாயம் அமைக்கப்படுவதால் காலநேரம் மிச்சப்படும்.

'ஒரே நாடு ஒரே வரி' என்று சொல்வது எளிது. ஆனால் செயல்படுத்துவது கஷ்டம். அரசியலுக்கு வேண்டுமென்றால் இது சரியாகும். கூட்டாட்சி தத்துவத்தில் அனைத்து மாநிலங்களின் உரிமைகளையும் காப்பாற்றுவதாக இருந்தால் மட்டுமே ஒரே நாடு ஒரே வரி பொருந்தும்.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story