ராமநாதபுரத்தில் 5½ கிலோ தங்கம்; ரூ.30 லட்சம் பறிமுதல்
ராமநாதபுரத்தில் அதிரடி சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த 5½ கிலோ தங்கக்கட்டிகள் மற்றும் ரூ.30 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்
ராமநாதபுரத்தில் அதிரடி சோதனையில் உரிய ஆவணங்கள் இல்லாமல் வைத்திருந்த 5½ கிலோ தங்கக்கட்டிகள் மற்றும் ரூ.30 லட்சத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக நகைக்கடை உரிமையாளர் மகன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
அதிரடி சோதனை
ராமநாதபுரத்தில் நகைக்கடை உரிமையாளர் ஒருவர் உரிய ஆவணங்கள் இன்றி தங்கம் மற்றும் லட்சக்கணக்கில் பணம் வைத்திருப்பதாக வருவாய் குற்றப்புலனாய்வு பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து மதுரையிலிருந்து சென்றிருந்த வருவாய் குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரிகள், ராமநாதபுரம் வெளிப்பட்டணம் பகுதியைச் சேர்ந்த நகைக்கடை உரிமையாளரின் வீட்டில் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையில் 5½ கிலோ தங்கம் மற்றும் ரூ.30 லட்சம் ஆகியவற்றை அதிகாரிகள் கைப்பற்றினர்.
3 பேர் கைது
இது தொடர்பாக நகைக்கடை உரிமையாளரின் மகன் மற்றும் அவரின் நண்பர்கள் இருவர் என மொத்தம் 3 பேரை கைது செய்த அதிகாரிகள் மதுரை அழைத்துச் சென்றனர். இந்த நகைக்கடை உரிமையாளர் ராமநாதபுரம் பஜார் பகுதியில் நகைக்கடை வைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ராமநாதபுரத்தில் உரிய ஆவணங்கள் இன்றி கணக்கில் காட்டாத 5½ கிலோ தங்கக் கட்டிகள் மற்றும் ரூ.30 லட்சம் பறிமுதல் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக சம்பந்தப்பட்ட உள்ளூர் அதிகாரிகளிடம் கேட்டபோது தங்களுக்கும் இந்த சோதனைக்கும் சம்பந்தமில்லை என்றும், மதுரையை சேர்ந்த வருவாய் குற்றப்புலனாய்வு பிரிவு அதிகாரிகள்தான் முழுமையாக இந்த சோதனையை மேற்கொண்டதாக தெரிவித்தனர்.