மதுரை பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் பலி: முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்


மதுரை பட்டாசு ஆலை வெடி விபத்தில் 5 பேர் பலி: முதல்- அமைச்சர் மு.க ஸ்டாலின் இரங்கல்
x

வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அறிவித்துள்ளார்.

மதுரை,

மதுரை மாவட்டம் வடக்கம்பட்டி அழகுசிறை பகுதியில் உள்ள பட்டாசு ஆலையில் இன்று வெடிவிபத்து ஏற்பட்டது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். சிலர் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர். இந்நிலையில், வெடிவிபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறியதுடன், அவர்களின் குடும்பங்களுக்கு நிதி உதவி அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கை:- மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே அழகுசிறை கிராமத்தில் செயல்பட்டு வந்த பட்டாசு தொழிற்சாலையில் இன்று திடீரென ஏற்பட்ட வெடிவிபத்தில் 5 பேர் உயிரிழந்தனர் என்ற செய்தியைக் கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். செய்தி அறிந்தவுடன் அமைச்சர் மூர்த்தியை மீட்பு பணிகளை துரிதப்படுத்த உடனடியாக சம்பவ இடத்திற்கு செல்ல அறிவுறுத்தி உள்ளேன்.

மேலும் இந்த விபத்தில் காயமடைந்தவர்களுக்கு மதுரை அரசு ராஜாஜி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிறப்பு சிகிச்சை அளிக்கவும் உத்தரவிட்டுள்ளேன். இச்சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக்கொண்டு உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய், முதலமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்கவும் உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு மு.க.ஸ்டாலின் தனது அறிக்கையில் கூறி உள்ளார்


Next Story