வடமாநில தொழிலாளர்களை தாக்கிய 5 பேர் கைது
வடமாநில தொழிலாளர்களை தாக்கிய 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
தா.பேட்டை:
துறையூர் தாலுகா, கண்ணனூரில் உத்தரபிரதேசம் மாநிலத்தை சேர்ந்த 6 பேர் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, அப்பகுதியில் கூலி வேலை செய்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று முன்தினம் இவர்களது வீட்டின் அருகில் மது அருந்திய இளைஞர்களிடம், இங்கு மது அருந்தக்கூடாது என்று கூறினர். இதனால் அந்த இளைஞர்கள், வட மாநில தொழிலாளர்களை வீடு புகுந்து தாக்கினர். இதில் சுனில்குமார் (வயது 36), நரேஷ் (32), ராகுல் (23), பருத்துராஜ் (24) ஆகியோருக்கு பலத்த காயம் ஏற்பட்டு, துறையூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டனர். இது குறித்து தா.பேட்டை இன்ஸ்பெக்டர் பொன்ராஜ் தலைமையில் ஜெம்புநாதபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். மேலும் இந்த சம்பவம் தொடர்பாக திருத்தலையூர் பகுதியை சேர்ந்த இளமுருகு(25), குபேந்திரன்(27), ஜீவா (26), சூரியபிரகாஷ் (29), ஜெயக்குமார் (41) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்து முசிறி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.