பணத்தகராறில் அடித்துக்கொன்ற 5 பேர் கைது


பணத்தகராறில் அடித்துக்கொன்ற 5 பேர் கைது
x

ஓமலூர் அருகே தண்டவாளத்தில் பெண் பிணமாக கிடந்த வழக்கில், அவரை பணத்தகராறில் அடித்துக்கொன்ற 5 ேபரை போலீசார் கைது செய்தனர்.

சேலம்

ஓமலூர்:-

ஓமலூர் அருகே தண்டவாளத்தில் பெண் பிணமாக கிடந்த வழக்கில், அவரை பணத்தகராறில் அடித்துக்கொன்ற 5 ேபரை போலீசார் கைது செய்தனர்.

பெண் பிணம்

ஓமலூர் அருகே கணவாய் புதூர் ஊராட்சி ராமமூர்த்தி நகர் பகுதியில் கடந்த 17-ந் தேதி ெரயில்வே தண்டவாளம் அருகில் 60 வயது மதிக்கத்தக்க பெண் பிணமாக கிடந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் தீவட்டிப்பட்டி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, அந்த பெண்ணின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

தொடர்ந்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அந்த பெண் யார்?, எப்படி இறந்தார்? என்பது குறித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அந்த பெண் தர்மபுரி மாவட்டம் கடத்தூர் பகுதியை சேர்ந்த மணி என்பவரது மனைவி மலர்விழி (வயது 60) என்பது தெரியவந்தது. அரசு பஸ் டிரைவரான மணி கடந்த 3 ஆண்டுக்கு முன்பு இறந்து விட்டார்.

திடுக்கிடும் தகவல்

மேலும் மலர்விழி பணம் வட்டிக்கு கொடுக்கும் தொழில் செய்து வந்துள்ளார். இதனால் வட்டிக்கு பணம் கொடுக்கல், வாங்கலில் தகராறு ஏற்பட்டு அடித்து கொலை செய்யப்பட்டாரா? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வந்தனர்.

போலீசார் விசாரணையில் பாப்பிரெட்டிப்பட்டி குண்டல்பட்டி தாளாநத்தம் பகுதியை சேர்ந்த கோவிந்தராஜ் (26) என்பவர் இறந்த மலர்விழியிடம் பணம் வாங்கி இருப்பது தெரியவந்தது. இதனை அடுத்து கோவிந்தராஜிடம் போலீசார் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது.

அடித்துக்கொலை

கோவிந்தராஜ் பைனான்ஸ் தொழில் செய்து வந்ததுடன், அவர் மலர்விழியிடம் ரூ.1½ லட்சம் பணம் வாங்கி உள்ளார். தொழிலில் நஷ்டம் ஆனதால், கோவிந்தராஜ், மலர்விழியிடம் வாங்கிய பணத்தை கொடுக்காமல் இருந்துள்ளார் சம்பவத்தன்று கோவிந்தராஜ், தனது அக்காள் புனிதா (30) வீட்டில் இருந்துள்ளார். அங்கு வந்த மலர்விழி பணம் கேட்டு அவரிடம் தகராறு செய்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த கோவிந்தராஜ், மலர்விழியை கன்னத்தில் ஓங்கி அடித்ததில் மயக்கம் அடைந்த மலர்வழி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த கோவிந்தராஜ் கடத்தூர் பகுதியை சேர்ந்த கார் உரிமையாளர் அன்பு ஆனந்த் (48) என்பவர் காரில் மலர்விழியின் உடலை எடுத்து சென்று ராமமூர்த்தி நகர் ெரயில்வே தண்டவாளம் அருகே போட்டு சென்றனர். இதையடுத்து மலர்விழியை அடித்துக் கொன்ற கோவிந்தராஜ் மற்றும் அதற்கு உடந்தையாக இருந்த கார் உரிமையாளர் அன்பு ஆனந்த், கோவிந்தராஜின் தாயார் விஜயகுமாரி (48), அவரது அக்காள் புனிதா மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வெங்கடகாரஹள்ளி பகுதியை சேர்ந்த பிரபாவதி (27) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.


Related Tags :
Next Story