தூய யோசேப்பு தேவாலயத்தில் 5 சப்பரங்கள் பவனி


தூய யோசேப்பு தேவாலயத்தில் 5 சப்பரங்கள் பவனி
x

பாளையம் கிராமத்தில் தூய யோசேப்பு தேவாலயத்தில் 5 சப்பரங்கள் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.

பெரம்பலூர்

பெரம்பலூர் மாவட்டம், குரும்பலூர் பேரூராட்சிக்குட்பட்ட பாளையம் கிராமத்தில் தூய யோசேப்பு தேவாலயம் உள்ளது. இந்த தேவாலயத்தின் 162-வது ஆண்டு பெருவிழா கடந்த 28-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் பாளையம் பங்கினை சேர்ந்த கிளை கிராம கிறிஸ்தவ மக்கள் மற்றும் அன்பியம் குழுவினரால் திருவழிபாடுகள் நடத்தப்பட்டது. நற்செய்தி உரையும் வாசிக்கப்பட்டது. விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர சப்பர பவனி நேற்று முன்தினம் நள்ளிரவு நடந்தது. சப்பர பவனியையொட்டி மாலையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. அதனை தொடர்ந்து நள்ளிரவு காவல் தூதர், வனத்த சின்னப்பர், உயிர்த்த ஏசு, தூய யோசேப்பு, செபஸ்தியார் மாதா ஆகிய சொரூபங்கள் தேவாலய வளாகத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த 5 சப்பரங்களில் தனித்தனியாக எழுந்தருள செய்யப்பட்டது. இதையடுத்து சப்பர பவனி வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திரளான கத்தோலிக்க கிறிஸ்தவர்கள் பங்கேற்று சிறப்பு பிரார்த்தனையில் ஈடுபட்டனர். சப்பரங்கள் முக்கிய வீதிகளின் வழியாக சென்று, நேற்று மாலை மீண்டும் நிலையை வந்தடைந்தது. அதனை தொடர்ந்து கொடியிறக்கத்துடன் பெருவிழா நிறைவு பெற்றது. இதற்கான ஏற்பாடுகளை தேவாலயத்தின் பங்கு குரு, கிராம முக்கியஸ்தர்கள், கன்னியாஸ்திரிகள், அன்பியம் குழுவினர், கிளை கிராம கிறிஸ்தவ மக்கள் செய்திருந்தனர்.


Next Story