5 கிராம மக்கள் தொடர் உண்ணாவிரதம்


5 கிராம மக்கள் தொடர் உண்ணாவிரதம்
x
தினத்தந்தி 16 Oct 2023 6:45 PM GMT (Updated: 16 Oct 2023 6:45 PM GMT)

சி.முட்லூர் மையப்பகுதியில் மேம்பாலம் கட்டக்கோரி 5 கிராம மக்கள் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடலூர்

விழுப்புரத்தில் இருந்து கடலூர், பெரியப்பட்டு, புதுச்சத்திரம், சி.முட்லூர் வழியாக நாகை வரை 4 வழிச்சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக சி.முட்லூர் கலைக்கல்லூரி மற்றும் நீதிமன்ற வளாகம் எதிரே மேம்பாலம் கட்ட திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால் இதற்கு கிராம மக்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். அதே சமயம் மேம்பாலத்தை சி.முட்லூரின் மையப்பகுதியில் கட்ட வேண்டும் என்று கோரிக்கை விடுத்து வருகின்றனர். ஆனால் கிராம மக்களின் கோரிக்கை ஏற்கப்படாமல் கலைக்கல்லூரி அருகிலேயே மேம்பாலம் கட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

5 கிராம மக்கள் உண்ணாவிரதம்

இதை கண்டித்தும், சி.முட்லூரின் மையப்பகுதியிலேயே மேம்பாலம் கட்டக்கோரியும் சி.முட்லூர், கீழமூங்கிலடி, மேலமூங்கிலடி, அம்பு பூட்டியபாளையம், மண்டபம் ஆகிய 5 கிராம மக்கள் நேற்று காலை முதல் சி.முட்லூர் மெயின் ரோடு அருகில் தொடர் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இது பற்றி தகவல் அறிந்ததும் புவனகிரி தாசில்தார் சுபக்குமார், சிதம்பரம் உதவி போலீஸ் சூப்பிரண்டு(பொறுப்பு) நாகராஜ் மற்றும் போலீசார் விரைந்து வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தாசில்தார், உங்களது கோரிக்கை குறித்து உயர் அதிகாரிகளிடம் தெரிவித்து நடவடிக்கை எடுப்பதாகவும், தற்போது போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லுமாறும் கூறினார். அதற்கு கிராம மக்கள், சி.முட்லூர் மையப்பகுதியில மேம்பாலம் கட்டப்படும் என்று உத்தரவாதம் அளித்தால் மட்டுமே கலைந்து செல்வோம் என்று கூறி, தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த உண்ணாவிரத போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அரசியல் கட்சியினரும் பங்கேற்றனர். இந்த போராட்டம் இன்றும்(செவ்வாய்க்கிழமை) தொடரும் என்று கிராம மக்கள் தெரிவித்தனர்.


Next Story