புதிய விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர்-பூந்தமல்லி இடையே 50 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் நீட்டிப்பு


புதிய விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர்-பூந்தமல்லி இடையே 50 கி.மீ. தூரத்துக்கு மெட்ரோ ரெயில் நீட்டிப்பு
x

புதிய விமான நிலையம் அமையவுள்ள பரந்தூர்-பூந்தமல்லி இடையே 50 கிலோ மீட்டர் தூரத்துக்கு மெட்ரோ ரெயில் பாதை அமைப்பதற்கான சாத்தியக்கூறு அறிக்கை தயாரிக்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

சென்னை

சென்னையில் 2-வது கட்ட மெட்ரோ ரெயில் திட்டப்பணி, ரூ.63 ஆயிரத்து 246 கோடி மதிப்பில், 118.9 கிலோ மீட்டர் தொலைவுக்கு 3 வழித்தடங்களில் நடந்து வருகிறது. குறிப்பாக மாதவரம்-சிறுசேரி சிப்காட் இடையே 3-வது வழித்தடத்தில் 45.8 கி.மீ. தொலைவுக்கும், கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 4-வது வழித்தடத்தில் 26.1 கி.மீ. தொலைவுக்கும், மாதவரம்-சோழிங்கநல்லூர் இடையே 5-வது வழித்தடத்தில் 47 கி.மீ. தொலைவுக்கும் பணிகள் நடைபெற்றுவருகின்றன.

இதில் கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி புறவழிச்சாலை வரை 26.1 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டுவரும் 4-வது வழித்தட மெட்ரோ ரெயில் பாதையை, பூந்தமல்லியில் இருந்து புதிதாக விமான நிலையம் அமைய உள்ள பரந்தூர் வரை கூடுதலாக 50 கி.மீ. தூரத்துக்கு நீட்டிப்பு செய்ய மெட்ரோ ரெயில் நிறுவனம் முடிவு செய்து உள்ளது. இதன் மூலம் சென்னை மாநகரின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் புதிதாக பரந்தூரில் அமையவுள்ள விமான நிலையத்தை எளிதாக சென்றடைய முடியும்.

பூந்தமல்லி-பரந்தூர் விமான நிலையம் வரை மெட்ரோ ரெயில் பாதையை எந்த வழியில் அமைப்பது, எங்கெல்லாம் ரெயில் நிலையங்கள் அமைப்பது, எத்தனை குடியிருப்பு பகுதிகளை இணைக்கும் வகையில் அமைப்பது, மெட்ரோ ரெயில் நிறுவனம் செலவிடும் தொகைக்கு ஏற்ப எவ்வளவு வருவாய் கிடைக்கும், தேவைப்படும் நிலம், அரசு, தனியார் நிலங்கள் எவ்வளவு தேவைப்படும் என்பவை குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கும் பணி நடந்துவருகிறது. இந்தக் குழு, பூந்தமல்லி-பரந்தூர் விமான நிலையத்துக்கு இடைப்பட்ட பகுதிகளில் ஆய்வு செய்து சாத்தியக்கூறு அறிக்கையை தயாரித்து மெட்ரோ ரெயில் நிறுவனத்திடம் வழங்க உள்ளது. அதற்குப் பிறகு திட்டத்தைச் செயல்படுத்துவதற்கு தேவையான நிதி, நேரம் உள்ளிட்டவை குறித்து விரிவான திட்ட அறிக்கை தயாரிக்கப்பட்டு, அரசின் அனுமதிக்கு அனுப்பி வைக்கப்படும். அதற்குப் பிறகே இந்த திட்டத்தை தொடங்குவது குறித்து அரசு முடிவு செய்து அறிவிக்கும்.

கேளம்பாக்கத்தில் இருந்து மாம்பாக்கம், வண்டலூர் வழியாக கிளாம்பாக்கம் புதிய பஸ் நிலையம் வரைக்கும், பூந்தமல்லி முதல் பரந்தூர் வரையிலும், திருமங்கலம் முதல் ஆவடி வரைக்கும் வழித்தடத்தை நீட்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

மண் பரிசோதனை செய்து முடித்தபிறகு மெட்ரோ ரெயில் நிர்வாகம் அடுத்த அறிவிப்பை முறையாக வெளியிடும். 2-வது கட்ட திட்டத்தை மேலும் 93 கி.மீ. தூரத்துக்கு நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

சென்னை மெட்ரோ ரெயில் நிறுவன அதிகாரிகள் இந்த தகவல்களை தெரிவித்தனர்.


Next Story