ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கார்களில் கடத்தி வந்த ரூ.50 லட்சம் கஞ்சா பறிமுதல்
ஆந்திராவில் இருந்து சென்னைக்கு கார்களில் கடத்தி வந்த ரூ.50 லட்சம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டன.
ஆந்திர மாநிலத்தில் இருந்து சென்னைக்கு கார்களில் கஞ்சா கடத்தி வரப்படுவதாக செங்குன்றம் போலீஸ் துணை கமிஷனர் மணிவண்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து செங்குன்றம் உதவி கமிஷனர் முருகேசன் மேற்பார்வையில் இன்ஸ்பெக்டர்கள் ரமேஷ், புவனேஸ்வரி தலைமையிலான போலீசார் செங்குன்றத்தை அடுத்த பாடியநல்லூர் செக்போஸ்டில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது ஆந்திர மாநிலத்தில் இருந்து, அம்மாநில பதிவு எண் கொண்ட 2 கார்கள் வேகமாக வந்தன. அவற்றை மடக்கி சோதனை செய்தபோது, 2 கார்களிலும் மூட்டை மூட்டையாக கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து போலீசார் 2 காரிலும் இருந்த ஆந்திர மாநிலத்தைச் சேர்ந்த மாரிராஜ் பாபு (வயது 32), புகாரி ராஜ்பாபு (26), பட்டி பிரபாகர் (28), கிஷோர்குமார் (28), அணுகுறி கொண்டலா (26) உள்ளிட்ட 7 பேரை கைது செய்தனர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் ஆந்திர மாநிலத்தில் இருந்து கஞ்சாவை கடத்தி வந்து சென்னை வியாசர்பாடியில் உள்ள ஒருவருக்கு சப்ளை செய்ய வந்தது தெரிந்தது,
அவர்களிடம் இருந்து ரூ.50 லட்சம் மதிப்பிலான 200 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட 2 கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன.