ஸ்ரீபெரும்புதூர் அருகே தைவான் நாட்டை சேர்ந்தவர் வீட்டில் ரூ.50 லட்சம் தங்க, வைர நகைகள் கொள்ளை


ஸ்ரீபெரும்புதூர் அருகே தைவான் நாட்டை சேர்ந்தவர் வீட்டில் ரூ.50 லட்சம் தங்க, வைர நகைகள் கொள்ளை
x

ஸ்ரீபெரும்புதூர் அருகே தைவான் நாட்டை சேர்ந்தவர் வீட்டில் ரூ.50 லட்சம் தங்க, வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது.

காஞ்சிபுரம்

வீட்டின் பூட்டு உடைப்பு

காஞ்சீபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்த மாம்பாக்கம் பகுதியில் வசித்து வருபவர் தைவான் நாட்டை சேர்ந்த நி சியா சியாங். இவர் சுங்குவார்சத்திரம் பகுதியில் உள்ள பிரபல செல்போன் உதிரிபாகங்கள் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் மேலாளராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் பணி முடிந்து மதியம் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டிருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

தங்க, வைர நகைகள் கொள்ளை

வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது அங்கு இருந்த 25 பவுன் தங்க நகைகள், வைர நகைகள், இந்திய மதிப்பில் ரூ.1½ லட்சம் அமெரிக்க டாலர் மற்றும் ரூ.2 லட்சம் மதிப்புள்ள பிளாட்டினம் வைத்திருந்த லாக்கர் பெட்டியை மர்ம நபர்கள் கொள்ளையடித்து சென்றது தெரியவந்தது. கொள்ளை போன பொருட்களின் மதிப்பு ரூ.50 லட்சம். இது குறித்து நி சியா சியாங் ஸ்ரீபெரும்புதூர் போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் கொள்ளை போன வீட்டின் அருகே உள்ள மற்றொரு வீட்டில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்ததில் 2 மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே சென்று 2 லாக்கர் பெட்டிகளை எடுத்து சென்றது தெரியவந்தது. இதுகுறித்து ஸ்ரீபெரும்புதூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.


Next Story