தமிழ்நாட்டில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்...!


தமிழ்நாட்டில் நாளை முதல் 500 டாஸ்மாக் கடைகள் மூடல்...!
x
தினத்தந்தி 21 Jun 2023 12:31 PM IST (Updated: 21 Jun 2023 1:55 PM IST)
t-max-icont-min-icon

தமிழ்நாட்டில் நாளை முதல் 500 சில்லறை டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது.

சென்னை,

தமிழ்நாட்டில் மொத்தம் 5 ஆயிரத்து 329 மதுக்கடைகள் உள்ளன. இதில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அப்போதைய மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜி அறிவிப்பு வெளியிட்டார். அதனை தொடர்ந்து 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான கணக்கெடுப்பு பணி தொடங்கப்பட்டது. எந்தெந்த கடைகளை மூடலாம் என்பது குறித்து ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. ஒவ்வொரு மண்டலத்திலும் எத்தனை கடைகள் மூடப்பட உள்ளன? அவை எந்தெந்த கடைகள் என்ற பட்டியல் மண்டல மேலாளர்கள் மூலம் பெறப்பட்டது.

இந்நிலையில், தமிழ்நாட்டில் 500 சில்லறை விற்பனை டாஸ்மாக் கடைகள் நாளை முதல் மூடப்படும் என்று டாஸ்மாக் நிர்வாகம் அறிவித்துள்ளது. 500 டாஸ்மாக் கடைகளை மூடுவதற்கான அரசாணை வெளியான நிலையில் நாளை முதல் கடைகள் மூடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு முதல்-அமைச்சர் அவர்களின் உத்தரவிற்கிணங்க மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் சட்டப்பேரவையில் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை மானியக் கோரிக்கையின் போது 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் கண்டறியப்பட்டு மூடப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

மேற்படி, அறிவிப்பிற்கிணங்க 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகளைக் கண்டறிந்து மூடிட 20.04.2023 நாளிட்ட அரசாணை எண்.140, உள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வை துறை வெளியிட்டது.

மேற்படி, அரசாணையை செயல்படுத்தும் விதமாக மாநிலம் முழுவதும் உள்ள மதுபான சில்லறை விற்பனைக் கடைகளில் 500 கடைகளை கண்டறிந்து அவற்றை (22.6.2023) நாளை முதல் மூட உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மேற்குறிப்பிட்ட 500 மதுபான சில்லறை விற்பனைக் கடைகள் (22.6.2023) நாளை முதல் செயல்படாது என்று தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story