பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லைஆசிரியர் கைது


பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லைஆசிரியர் கைது
x
தினத்தந்தி 10 Aug 2023 6:45 PM GMT (Updated: 10 Aug 2023 6:46 PM GMT)

கன்னியாகுமரி அருகே அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

கன்னியாகுமரி

கன்னியாகுமரி அருகே அரசு பள்ளியில் 5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ஆசிரியரை போலீசார் கைது செய்தனர்.

பாலியல் தொல்லை

கன்னியாகுமரி அருகே ஒரு கிராமத்தில் அரசு தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளிக்கூடத்தில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் பள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியர் ஒருவர், 5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. மேலும் பாதிக்கப்பட்ட ஒரு மாணவி தன்னுடைய பெற்றோரிடம் கூறி கதறி அழுதுள்ளார்.

இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த மாணவிகளின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் நேற்று காலையில் பள்ளிக்கூடத்திற்கு திரண்டு வந்து முற்றுகையிட்டனர்.

ஆசிரியர் கைது

சம்பந்தப்பட்ட ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோஷங்களை எழுப்பினர். இதனால் அங்கு பதற்றம் நிலவியது.

இதுபற்றி தகவல் அறிந்ததும் கன்னியாகுமரி போலீஸ் இன்ஸ்பெக்டர் சாந்தி தலைமையிலான போலீசார் விரைந்து வந்து முற்றுகையிட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். மேலும் பாதிக்கப்பட்ட மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் கூடங்குளம் பகுதியை சேர்ந்த தற்காலிக ஆசிரியர் பட்சபூராஜா (வயது 41) என்பவர் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது.

இதுதொடர்பாக கன்னியாகுமரி போலீஸ் நிலையத்தில் மாணவிகள் சார்பில் புகார் கொடுக்கப்பட்டது. அதன்பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து ஆசிரியர் பட்சபூராஜாவை கைது செய்தனர்.

5-ம் வகுப்பு மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக ஆசிரியர் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story