கொடுங்கையூரில் ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது - தப்பி ஓட முயன்ற 3 பேருக்கு கை, கால் முறிந்தது


கொடுங்கையூரில் ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது - தப்பி ஓட முயன்ற 3 பேருக்கு கை, கால் முறிந்தது
x

கொடுங்கையூரில் ரவுடி கொலை வழக்கில் 6 பேர் கைது செய்யப்பட்டனர். தப்பி ஓடமுயன்றபோது கிேழ விழுந்ததில் 3 பேருக்கு கை, காலில் எலும்பு முறிவு ஏற்பட்டது.

சென்னை

சென்னை புளியந்தோப்பு, குமாரசாமி ராஜபுரம் 3-வது தெருவைச் சேர்ந்த கருப்பா என்ற ரகுபதி (வயது 30). ரவுடியான இவர் மீது கொலை, கொலை முயற்சி உள்ளிட்ட 15 வழக்குகள் நிலுவையில் உள்ளன.

ரகுபதி தற்போது கொடுங்கையூர், முத்தமிழ் நகர், தெற்கு அவென்யூ பகுதிக்கு குடியேறி, அங்கு ஆட்டோ ஓட்டி வந்தார். நேற்று முன்தினம் காலை ஆட்டோ நிறுத்தத்தில் நின்றிருந்த ரகுபதியை 2 ஆட்டோக்களில் வந்த மர்ம கும்பல் ஓடஓட விரட்டி வெட்டிக்கொலை செய்தது.

இதுகுறித்து கொடுங்கையூர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். எம்.கே.பி. நகர் போலீஸ் உதவி கமிஷனர் தமிழ்வாணன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளிகளை தேடி வந்தனர்.

இந்தநிலையில் ரகுபதி கொலை வழக்கில் தேடப்படு்ம் கொலையாளிகள் கொடுங்கையூர் குப்பைமேடு பகுதியில் பதுங்கி இருப்பதாக கிடைத்த ரகசிய தகவலின்பேரில் தனிப்படை போலீசார் அங்கு சென்று 6 பேர் கும்பலை சுற்றி வளைத்து பிடித்தனர்.

அதில் 3 பேர் போலீஸ் பிடியில் இருந்து தப்பி ஓட முயன்றபோது கீழே விழுந்தனர். இதில் கொடுங்கையூரைச் சேர்ந்த சுரேஷ் (வயது 28), புளியந்தோப்பைச் சேர்ந்த மணிகண்டன் என்ற வெள்ளை மணி (30) ஆகிய இருவருக்கும் வலது கையில் எலும்பு முறிவும், சூளை தட்டாங்குளத்தைச் சேர்ந்த மணிகண்டன் (27) என்பவருக்கு வலது கை மற்றும் இடது காலிலும் எலும்பு முறிவு ஏற்பட்டது. இவர்கள் ஸ்டான்லி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு மாவு கட்டு போடப்பட்டது.

இவர்கள் உள்பட கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த ரபீக் (26), டுமின் குப்பத்தைச் சேர்ந்த சீமான்ராஜ் (40), நலம்பூரை சேர்ந்த பாலாஜி (33) ஆகிய 6 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். மது அருந்தியபோது ஏற்பட்ட தகராறில் ரகுபதியை கொன்றதாக போலீசாரிடம் தெரிவித்தனர்.


Next Story