நடுக்கடலில் மணல் திட்டில் குழந்தைகள் உள்பட 6 பேர் தவிப்பு
தனுஷ்கோடிக்கு தப்பிவரும் முயற்சியில் நடுக்கடலில் மணல் திட்டில் தவித்த 6 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டு அழைத்துச்சென்றனர்.
ராமேசுவரம்,
தனுஷ்கோடிக்கு தப்பிவரும் முயற்சியில் நடுக்கடலில் மணல் திட்டில் தவித்த 6 பேரை இலங்கை கடற்படையினர் மீட்டு அழைத்துச்சென்றனர்.
நடுக்கடலில் தவித்த அகதிகள்
இலங்கையில் இருந்து படகு மூலம் அகதிகள் சிலர் தனுஷ்கோடியை நோக்கி வரும் வழியில், நடுக்கடலில் உள்ள மணல் திட்டில் தவித்து வருவதாக இந்திய கடலோர காவல் படைக்கு தகவல் கிடைத்தது. அதைதொடர்ந்து மண்டபத்தில் உள்ள இந்திய கடலோர காவல் படையினர் ஹோவர்கிராப்ட் கப்பலில் தனுஷ்கோடி அருகே இந்திய கடல் எல்லை வரையிலான மணல் திட்டு பகுதிகளில் தேடினர்.
ஆனால் அகதிகள் யாரும் இல்லை என தெரியவந்தது. அதே நேரத்தில் இலங்கை கடல் எல்லைக்கு உட்பட்ட மணல் திட்டில் தவித்த 2 ஆண்கள், ஒரு பெண், 3 குழந்தைகள் என 6 பேரை இலங்கை கடற்படையினர் கப்பலில் ஏற்றி மீண்டும் இலங்கைக்கு அழைத்து சென்றனர்.
விசாரணை
6 பேரும் இலங்கையில் இருந்து தமிழகத்தில் தஞ்சம் அடைவதற்காக படகு மூலம் தப்பிவர முயன்றவர்கள் என்பதும், அவர்களை படகில் அழைத்து வந்தவர்கள் மணல் திட்டில் இறக்கிவிட்டு தப்பிச்சென்றதும் தெரியவந்தது.
இது குறித்து இலங்கை கடற்படையினர் அவர்கள் 6 பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.