மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஒரே நாளில் 6 டன் மின்னணு கழிவுகள் சேகரிப்பு;கலெக்டர் தகவல்


மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஒரே நாளில் 6 டன் மின்னணு கழிவுகள் சேகரிப்பு;கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 25 Feb 2023 6:45 PM GMT (Updated: 25 Feb 2023 6:45 PM GMT)

குமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஒரே நாளில் 6 டன் மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட்டதாக கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

கன்னியாகுமரி

நாகர்கோவில்,

குமரி மாவட்டத்தில் மாநகராட்சி, நகராட்சி பகுதிகளில் ஒரே நாளில் 6 டன் மின்னணு கழிவுகள் சேகரிக்கப்பட்டதாக கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் தெரிவித்தார்.

மின்னணு கழிவுகள்

நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் வாரந்தோறும் சனிக்கிழமை அன்று பொதுமக்களிடம் இருந்து மின்னணு கழிவுகள் வீடு, வீடாக சேகரிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி சனிக்கிழமையான நேற்று மின்னணு கழிவுகளை சேகரிக்கும் பணியை நாகர்கோவில் கோட்டார் டி.வி.டி. காலனி முதல் தெருவில் தொடங்கி வைக்கும் நிகழ்ச்சி நடந்தது. நிகழ்ச்சிக்கு நாகர்கோவில் மாநகராட்சி ஆணையர் ஆனந்த் மோகன் முன்னிலை வகித்தார்.

மாவட்ட கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் மின்னணு கழிவுகள் சேகரிக்கும் பணியை தொடங்கி வைத்தார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-

6 டன் சேகரிப்பு

குமரி மாவட்டத்தை குப்பை இல்லா பசுமை மாவட்டமாக மாற்ற பல்வேறு முன்னெடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக நாகர்கோவில் மாநகராட்சி மற்றும் குளச்சல், பத்மநாபபுரம், குழித்துறை, கொல்லங்கோடு ஆகிய நான்கு நகராட்சிகளுக்கு உட்பட்ட பகுதிகளில் வசிக்கும் பொதுமக்களிடமிருந்து தூய்மை பணியாளர்கள் வீடு, வீடாகச் சென்று ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் மின்னணு கழிவுகளை சேகரிக்கும் பணி தொடங்கி வைக்கப்பட்டது.

வணிக நிறுவனங்களில் இருந்து உற்பத்தியாகும் மின்னணு கழிவுகள், பேட்டரி கழிவுகள் மற்றும் டயர் கழிவுகள் ஆகிய மூன்று வகையான கழிவுகளை சேகரித்து அதனை குப்பை கிடங்குகளுக்கு கொண்டு செல்லாமல் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் மூலமாக அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களுக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளது. நாகர்கோவில் மாநகராட்சியில் 2.85 டன், பத்மநாபபுரம் நகராட்சியில் 0.93 டன், குழித்துறை நகராட்சியில் 0.62 டன், கொல்லங்கோடு நகராட்சியில் 0.74 டன், குளச்சல் நகராட்சியில் 0.80 டன் மின்னணு கழிவுகள் என மொத்தம் 6 டன் சேகரிக்கப்பட்டுள்ளது. பொதுமக்கள் அனைவரும் நமது மாவட்டத்தை முழு குப்பை இல்லா பசுமை மாவட்டமாக மாற்றுவதற்கு முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

அதை தொடர்ந்து நாகர்கோவில் மாநகராட்சிக்கு உட்பட்ட அனாதைமடம் மைதானத்தில் நிறுத்தப்பட்டுள்ள வாகனத்தில் சேகரித்த மின்னணு கழிவுகளை கலெக்டர் பி.என்.ஸ்ரீதர் பார்வையிட்டார். நிகழ்ச்சிகளில் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் பாண்டியராஜன், மாநகர நல அதிகாரி ராம்குமார், சுகாதார ஆய்வாளர்கள், அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story