மின்மாற்றி பழுதால் 60 ஏக்கர் நெற்பயிர்கள் கருகுகிறது


மின்மாற்றி பழுதால் 60 ஏக்கர் நெற்பயிர்கள் கருகுகிறது
x
தினத்தந்தி 21 Aug 2023 6:45 PM GMT (Updated: 21 Aug 2023 6:46 PM GMT)

குடியநல்லூரில் மின்மாற்றி பழுதால் 60 ஏக்கர் நெற்பயிர்கள் கருகுகிறது. மின்மாற்றியை உடனடியாக சீரமைக்க அதிகாரிகள் பணம் கேட்பதாக விவசாயிகள் குற்றம்சாட்டி உள்ளனர்.

கள்ளக்குறிச்சி

தியாகதுருகம்,

தியாகதுருகம் அருகே குடியநல்லூர் கிராமத்தை சேர்ந்த விவசாயிகள் பலர் கிணற்று பாசனம் மூலம் சுமார் 60 ஏக்கர் நிலப்பரப்பில் நெற்பயிர் சாகுபடி செய்து பராமரித்து வந்தனர். பயிர்கள் நன்கு வளர்ந்து அறுவடைக்கு தயாராகி வந்ததால் இந்தாண்டு நல்ல விளைச்சல் கிடைக்கும்.

அதன்மூலம் அதிக வருமானம் கிடைக்கும் என விவசாயிகள் எதிர்பார்த்து இருந்தனர். இந்த நிலையில் கடந்த 10 நாட்களுக்கு முன்பு அப்பகுதியில் உள்ள மின்மாற்றி பழுதானது. இதனால் மின்தடை ஏற்பட்டுள்ளதால், விவசாய மின்மோட்டார்களை விவசாயிகளால் இயக்க முடியவில்லை.

இதன் காரணமாக நெற்பயிர்களுக்கு தண்ணீர் பாய்ச்ச முடியாதநிலை ஏற்பட்டுள்ளதால், அறுவடைக்கு தயராகி வந்த நெற்பயிர்கள் தற்போது காய்ந்து கருகி வருகிறது. இதனால் விவசாயிகளுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளதால் அவர்கள் பெரும் கவலை அடைந்து வருகின்றனர்.

மின்மாற்றியை சீரமைக்க பணம்

இதையடுத்து விவசாயிகள் சம்பந்தப்பட்ட மின்வாரிய அதிகாரிகளை சந்தித்து பழுதடைந்த மின்மாற்றியை விரைந்து சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். அதற்கு அதிகாரிகள், பழுதடைந்த மின்மாற்றியை உடனடியாக சீரமைக்க வேண்டும் என்றால், மின் இணைப்பு வைத்துள்ள விவசாயிகள் ஒவ்வொருவரும் தலா ரூ.2 ஆயிரத்து 500 கொடுக்க வேண்டும்.

அவ்வாறு கொடுத்தால், மின்மாற்றியில் தனியார் நிறுவனத்தின் மூலம் புதிய காயில் பொருத்தி சீராக மின்வினியோகம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது. இதனை கேட்ட விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

நஷ்டம்

இதுகுறித்து குடியநல்லூர் கிராமத்தை சேர்ந்த விவசாயி குமரவேல் என்பவர் கூறுகையில், கடந்த 3 மாதத்திற்கு முன்பு எனது நிலத்தில் நெற்பயிர் சாகுபடி செய்து பராமரித்து வருகிறேன். இதுவரை ரூ.40 ஆயிரம் வரை செலவு செய்துவிட்டேன். இந்த நிலையில் மின்மாற்றி பழுதால், எங்களது மின்மோட்டார்களை இயக்க முடியவில்லை. இதனால் எனது வயலில் உள்ள நெற்பயிர்கள் தற்போது தண்ணீரின்றி கருகி வருகிறது. இன்னும் 3 முறை மட்டும் தண்ணீர் பாய்ச்சினால் போதும். நெற்பயிர்கள் நன்கு விளைந்து விடும். ஆனால் தண்ணீர் பாய்ச்ச முடியாததால், நெல்மணிகள் அனைத்தும் தற்போது புதராக மாறி வருகிறது.

இதனால் விளைச்சல் பாதிக்கப்பட்டு நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதேபோல் அருகில் உள்ள பலரின் வயல்களில் சாகுபடி செய்யப்பட்டுள்ள கரும்பு மற்றும் நெற்பயிர்களும் கருகி வருகிறது. அதிக செலவு செய்து பராமரித்து வந்த எங்களது நெற்பயிர்கள் தற்போது எங்கள் கண்முன்னே கருகி வீணாகி வருகிறது. இதை தடுக்க எங்களால் முடியவில்லை.

நடவடிக்கை

மின்மாற்றியை சீரமைக்க அதிகாரிகளிடம், கேட்டால், அவர்கள், அதற்கு பணம் கேட்கிறார்கள். கடன் வாங்கித்தான் தற்போது விவசாயம் செய்து வருகிறோம். நாங்கள் செலவு செய்த பணம் எங்களுக்கு கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது.. இதனால் வாங்கிய கடனை எப்படி திருப்பி கொடுக்க போகிறோம் என்று தெரியாமல் தவித்து வரும் எங்களிடம் பணம் கேட்டால் நாங்கள் பணத்துக்கு எங்கே செல்வோம்.

எனவே எங்களின் நிலைமையை கருத்தில் கொண்டு நெற்பயிர்களை காப்பாற்ற உடனடியாக பழுதடைந்த மின்மாற்றியை உடனே சீரமைக்க மாவட்ட கலெக்டர் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.


Next Story