"அடுத்த 5 ஆண்டுகளில் 6,220 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி" - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்


அடுத்த 5 ஆண்டுகளில் 6,220 மெகாவாட் கூடுதல் மின் உற்பத்தி - அமைச்சர் செந்தில் பாலாஜி தகவல்
x

தமிழகத்தில் மட்டுமே குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதிக்கான ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.

சென்னை,

வடசென்னையில் அமைக்கப்பட்டுள்ள அனல்மின் நிலையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி இன்று ஆய்வு மேற்கொண்டார். இதன் பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய அவர், தமிழகத்தின் மின் தேவை 14 ஆயிரத்து 500 மெகாவாட்டில் இருந்து, 16 ஆயிரத்து 500 மெகாவாட்டாக உயர்ந்துள்ளதாக தெரிவித்தார்.

மேலும் வடசென்னையில் அமைக்கப்பட்டுள்ள மின் நிலையத்திற்கு ஒரு நாளைக்கு 8 ஆயிரத்து 800 டன் நிலக்கரி தேவை உள்ளதோடு, குறைந்த நிலக்கரியில் அதிக மின்சாரத்தை உற்பத்தி செய்ய இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.

பிற மாநிலங்களில் அதிக விலை கொடுத்து நிலக்கரி இறக்குமதி செய்யும் நிலையில், தமிழகத்தில் மட்டுமே குறைந்த விலையில் நிலக்கரி இறக்குமதிக்கான ஒப்பந்தப்புள்ளி இறுதி செய்யப்பட்டுள்ளதாக தெரிவித்த அவர், இனி வரும் காலங்களில் நிலக்கரி தட்டுபாடு இல்லாத அளவிற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

அடுத்த 5 ஆண்டுகளில் தமிழ்நாடு மின்சார வாரியம் 6,220 மெகாவாட் கூடுதலாக மின் உற்பத்தி செய்யும் எனவும், அதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.


Next Story