கொரோனா சிகிச்சைக்காக 64 ஆயிரம் படுக்கைகள் தயார்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி


கொரோனா சிகிச்சைக்காக 64 ஆயிரம் படுக்கைகள் தயார்- அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேட்டி
x

கொரோனா சிகிச்சைக்காக 64 ஆயிரம் படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

சென்னை

ஒத்திகை

சென்னை மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரியில் கொரோனா சிகிச்சை முறைகள் மற்றும் தயார்நிலை குறித்த ஒத்திகை நேற்று நடந்தது. இதனை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.

இதையடுத்து அமைச்சர் மா.சுப்பிரமணியன் நிருபர்களிடம் கூறியதாவது:-

ஒமைக்ரானின் உருமாற்றமான இன்னொரு வகையிலான பாதிப்பு இந்தியா முழுவதும் பரவிக்கொண்டிருக்கிறது. அந்த வகையில் தான் மத்திய அரசும், முதல்-அமைச்சரும் கொரோனா சிகிச்சை தொடர்பான மாதிரி பயிற்சி தமிழ்நாடு முழுவதும் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்திய நிலையில் 2 நாட்கள் இந்த பயிற்சி நடத்தப்பட உள்ளது. அதன்படி தமிழ்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேம்படுத்தப்பட்ட ஆரம்ப சுகாதார நிலையங்கள், கூடுதல் ஆரம்ப சுகாதார நிலையங்கள், வட்டார அரசு ஆஸ்பத்திரிகள், வட்டம் சாரா அரசு ஆஸ்பத்திரிகள், மாவட்ட அரசு ஆஸ்பத்திரிகள் மற்றும் மருத்துவ கல்லூரி ஆஸ்பத்திரிகள் என அனைத்து மருத்துவ கட்டமைப்புகளிலும் கொரோனா சிகிச்சை மாதிரி பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது. நாளையும் (இன்று) இது நடைபெறும். அந்தந்த மாவட்டங்களை சேர்ந்த மாவட்ட கலெக்டர்கள் மாதிரி பயிற்சியில் ஈடுபட உள்ளனர்.

படுக்கைகள் தயார்

ஆக்சிஜன் படுக்கை வசதிகள், ஆக்சிஜன் கையிருப்புகள், மருத்துவ பணியாளர்கள், பரிசோதனைகள், சிகிச்சைக்கு தேவையான வசதிகள், மாத்திரை மருந்துகள் கையிருப்பு, முகக்கவசங்கள், பாதுகாப்பு கவச உடை ஆகியவற்றின் கையிருப்புகள், அவசர ஊர்திகளின் எண்ணிக்கை போன்றவை இந்த பயிற்சியின் மூலம் ஆய்வு செய்யப்பட்டு இருப்பினை உறுதி செய்யும் நடவடிக்கை எடுக்கப்படும்.

64 ஆயிரத்து 281 படுக்கைகள் கொரோனா சிகிச்சைக்காக தயார் நிலையில் உள்ளது. இதில் ஆக்சிஜன் வசதி கொண்ட 33 ஆயிரத்து 664 படுக்கைகள், 7 ஆயிரத்து 797 தீவிர சிகிச்சை படுக்கைகள், 24 ஆயிரத்து 61 ஆக்சிஜன் செறிவூட்டிகள் தயார் நிலையில் உள்ளன. 260 பி.எஸ்.ஏ. நிலையம், 130 ஆக்சிஜின் சேமிப்பு கலன்கள் தயார்நிலையில் உள்ளன. மேலும், 2 ஆயிரத்து 67 டன் திரவ நிலை ஆக்சிஜன் சேமிப்பு திறன் உள்ளது. ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை நிலையங்கள் அரசின் சார்பில் 78 இடங்களிலும், 264 தனியார் இடங்களிலும் என மொத்தம் 342 இடங்களில் தயார் நிலையில் உள்ளன. ஒரு நாளுக்கு 3 லட்சம் பேருக்கு பரிசோதனை செய்யும் வசதிகள் உள்ளது. பரிசோதனைகள் அதிகரிக்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. தற்போது குழு பாதிப்புகள் இல்லை, தனிநபருக்கான பாதிப்புகள் மட்டுமே ஏற்பட்டு வருகிறது. இந்த வைரஸ் பாதிப்பு மிகப்பெரிய அளவில் வீரியமான தாக்குதலாக இல்லாமல் இருப்பதால் ஆஸ்பத்திரிகளில் அனுமதிக்கும் தேவை ஏற்படவில்லை.

தடுப்பூசி

சமீபத்தில் 'இன்புளுயன்சா' காய்ச்சல் தொற்று இந்தியா முழுவதும் பரவியது. மத்திய அரசு அறிக்கை மட்டுமே தந்தது. ஆனால் முதல்-அமைச்சர் உடனடியாக கடந்த மாதம் 10-ந் தேதி தொடங்கி சிறப்பு முகாம்கள் நடத்த வேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்படி, கடந்த மாதம் 10-ந் தேதி ஒரே நாளில் 1,000 இடங்களில் காய்ச்சல் முகாம்கள் நடத்தப்படும் என்று அறிவித்து 1,586 முகாம்கள் நடத்தப்பட்டன. இதுவரை அந்த முகாம்களை பொறுத்தவரை 53 ஆயிரத்து 285 முகாம்கள் பள்ளிகளிலும், பொது இடங்களிலும் நடத்தப்பட்டிருக்கிறது.

இதில் 11 ஆயிரத்து 159 பேருக்கு காய்ச்சல் பாதிப்புகள் கண்டறியப்பட்டது. அவர்கள் அனைவரும் தற்போது நலமாக உள்ளனர். எனவே 'இன்புளுயன்சா' காய்ச்சல் தற்போது முற்றிலுமாக இல்லாத நிலை தொடர்கிறது. இருந்தாலும் முதல்-அமைச்சர் முன்கள பணியாளர்களுக்கு தடுப்புசி போடவேண்டும் என்று அறிவுறுத்தினார். அதன்படி தமிழ்நாடு மருந்துவ சேவை கழகத்தின் மூலம் 5 ஆயிரத்து 500 தடுப்பூசிகள் கொள்முதல் செய்யப்பட்டு முன்கள பணியாளர்களுக்கு தடுப்பூசி போடும் பணி நடைபெற்றுக்கொண்டிருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த நிகழ்வில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அரசு முதன்மைச் செயலாளர் செந்தில்குமார், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், மருத்துவ கல்வி இயக்குனர் டாக்டர் சாந்திமலர், சென்னை மருத்துவ கல்லூரி முதல்வர் டாக்டர் தேரணிராஜன், மருத்துவ பேராசிரியர்கள் மற்றும் நர்சுகள் கலந்துகொண்டனர்.


Next Story