ரூ.6,722 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்


ரூ.6,722 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம்
x
தினத்தந்தி 3 Jun 2023 6:45 PM GMT (Updated: 3 Jun 2023 6:46 PM GMT)

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் ரூ.6,722 கோடி கடன் வழங்க இலக்கு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.

கள்ளக்குறிச்சி

கள்ளக்குறிச்சி:

கள்ளக்குறிச்சி மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மாவட்ட முன்னோடி வங்கியின் சார்பில் அனைத்து வங்கியாளர்கள் கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். மாவட்ட முன்னோடி வங்கி மேலாளர் முனீஸ்வரன், இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கவுரி சங்கர்ராவ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் நடப்பு ஆண்டிற்கான (2023-2024) வருடாந்திர கடன் திட்ட அறிக்கையை கலெக்டர் வெளியிட்டார். பின்னர் கலெக்டர் பேசியதாவது:-

கடன் வழங்க இலக்கு

நடப்பாண்டில் ரூ.6,722 கோடியே 27 லட்சம் கடன் வழங்க இலக்கு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் விவசாய கடனாக ரூ.5,962 கோடியே 66 லட்சமும், நடுத்தர சிறு, குறு தொழில் கடனாக ரூ.641 கோடியே 17 லட்சமும், இதர முன்னுரிமை கடனாக ரூ.118 கோடியே 44 லட்சமும் வழங்க திட்ட இலக்காகும். வங்கியாளர் மத்திய, மாநில அரசின் திட்டங்களுக்கு முன்னுரிமை கொடுத்து அனைத்து விண்ணப்பங்களையும் 15 நாட்களுக்குள் தீர்வு காண வேண்டும். அனைத்து வங்கிகளும் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்ட பணியாளர்களின் வங்கி கணக்குகளை புதுப்பித்து ஊதியத்தினை விரைந்து வங்கி கணக்கில் வரவு வைத்திட வேண்டும். இப்பணியை மேற்கொள்ள வங்கி கணக்குடன் ஆதார் எண் இணைக்கும் பணியினை ஊரக வளர்ச்சித்துறை அலுவலர்களுடன் இணைந்து சிறப்பு முகாம்கள் வங்கியாளர்கள் நடத்த வேண்டும்.

சாதனை

கடந்த ஆண்டில் நமது மாவட்டம் மகளிர் திட்ட கடன் இலக்கை தாண்டி மாநிலத்தில் முதல் மாவட்டமாக சாதனை புரிந்துள்ளது. இதேபோன்று மாவட்ட தொழில் மைய திட்டங்களில் 100 சதவீதம் சாதனை புரிந்துள்ளது. இதற்கு வங்கிகளின் செயல்பாடுகளின் ஒத்துழைப்பு பாராட்டத்தக்க வகையில் உள்ளது. மாவட்டத்தில் வருடாந்திர கடன் இலக்கு 80 சதவீதத்தை தாண்டி சாதனை படைத்துள்ளது. எனவே மாவட்ட வளர்ச்சிக்கு வங்கிகள் உதவிட வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

கூட்டத்தில் கலெக்டர் மாவட்டத்தில் உள்ள அனைத்து வங்கியாளர்களின் செயல்பாடுகள் குறித்து ஆய்வு செய்தார். பின்னர் மாவட்ட தொழில் மையம், வாழ்ந்து காட்டுவோம் திட்டம், தாட்கோ திட்டங்கள் மற்றும் மகளிர் திட்டம் உள்ளிட்ட திட்டங்களின் கடன் விண்ணப்பங்கள் தொடர்பாக வங்கி வாரியாக மதிப்பாய்வு செய்தார். இதில் மகளிர் திட்ட இயக்குனர் சுந்தர்ராஜன், மாவட்ட தொழில் மைய திட்ட அலுவலர் கலைச்செல்வி, தாட்கோ மேலாளர் அனந்தமோகன், நபார்டு வங்கி மேலாளர் பாலகிருஷ்ணன், வாழ்ந்து காட்டுவோம் திட்ட அலுவலர் தினகர் ராஜ்குமார், அனைத்து மாவட்ட வங்கி பொதுமேலாளர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Next Story