அம்பத்தூரில் தனியார் கம்பெனியில் ரூ.7 கோடி கையாடல் - ஊழியர்கள் 5 பேர் கைது


அம்பத்தூரில் தனியார் கம்பெனியில் ரூ.7 கோடி கையாடல் - ஊழியர்கள் 5 பேர் கைது
x

அம்பத்தூரில் தனியார் கம்பெனியில் ரூ.7 கோடி கையாடல் செய்த ஊழியர்கள் 5 பேரை போலீசார் கைது செய்தனர்.

சென்னை

ஆவடியை அடுத்த அயப்பாக்கம் எழில் நகரை சேர்ந்தவர் கோபிநாத் (வயது 37). இவர், அம்பத்தூர் எஸ்டேட்டில் உள்ள தனியார் நிறுவனத்தில் மனிதவள மேம்பாட்டு துறை அதிகாரியாக பணிபுரிந்து வருகிறார். இவர், ஆவடி போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனுவில் கூறி இருப்பதாவது:-

எங்கள் நிறுவனத்தில் பெரியார் நகரை சேர்ந்த டைசிகஸ் விவேக் குமார் (32), நாகப்பட்டினத்தை சேர்ந்த குமரவேல் (29), வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த தாமோதரன் (29), சுரேஷ் (32), தென்காசி மாவட்டம் ஆலங்குளம் பகுதியை சேர்ந்த செல்வக்குமார் (32), திருவொற்றியூர் பகுதியை சேர்ந்த திலீப் குமார் (32) ஆகிய 6 பேர் மென்பொருள் பணி ஊழியர்களாக பணியாற்றி வந்தனர்.

இவர்கள் எங்கள் நிறுவனத்தில் பணிபுரிவதுபோல் 126 போலி பணியாளர்கள் பட்டியலை தயாரித்து, தங்கள் நண்பர்கள் மற்றும் உறவினர்கள் பெயரில் வங்கி கணக்கு தொடங்கி ரூ.6 கோடியே 95 லட்சம் வரை நிறுவனத்தின் பணத்தை கையாடல் செய்துள்ளனர். இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

இதையடுத்து போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் உத்தரவின் பேரில் ஆவடி மத்திய குற்றப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் கீதா வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டார். விசாரணைக்கு பிறகு டைசிகஸ் விவேக்குமார், தாமோதரன், குமரவேல், சுரேஷ், செல்வக்குமார் ஆகிய 5 பேரை கைது செய்து சிறையில் அடைத்தனர். மேலும் ஒருவரை தேடி வருகின்றனர்.


Next Story