70 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.7½ கோடி கடன்
கள்ளக்குறிச்சியில் நடந்த கூட்டுறவு வார விழாவில் 70 சுயஉதவி குழுக்களுக்கு ரூ.7½ கோடி கடனுதவியை அமைச்சர் எ.வ.வேலு வழங்கினார்.
கள்ளக்குறிச்சியில் மாவட்ட கூட்டுறவுத்துறை சார்பில் 69-வது அனைத்திந்திய கூட்டுறவு வார விழா நடைபெற்றது. விழாவிற்கு மாவட்ட கலெக்டர் ஷ்ரவன் குமார் தலைமை தாங்கினார். விழுப்புரம் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிக்குமார், சட்டமன்ற உறுப்பினர்கள் உதயசூரியன், வசந்தம்.கார்த்திகேயன், மணிக்கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
விழுப்புரம் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி மேலாண்மை இயக்குனர் இளஞ்செல்வி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளராக பொதுப்பணித்துறை மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ.வேலு கலந்துகொண்டு குத்துவிளக்கு ஏற்றி கூட்டுறவு வார விழாவை தொடங்கி வைத்தார். தொடர்ந்து 70 சுய உதவி குழுக்களை சேர்ந்த 1,150 பேருக்கு ரூ. 7 கோடியே 63 லட்சம் மதிப்பில் கடனுதவி வழங்கினார். மேலும் 5 பேருக்கு மொத்தம் ரூ.12 லட்சத்து 61 ஆயிரத்து 800 மதிப்பில் பயிர்க்கடன், கால்நடை பராமரிப்பு கடன் உள்ளிட்ட கடனுதவிகளையும் வழங்கினார்.
பின்னர் கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவு சங்கங்கள், அதிகாரிகள், வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள், ரேஷன் கடை விற்பனையாளர்களுக்கு கேடயம் வழங்கினார்.
ரூ.250 கோடி பயிர்கடன்
பின்னர் அவர் பேசுகையில், கள்ளக்குறிச்சி மண்டலத்தில் 126 கூட்டுறவு சங்கங்கள் பொதுமக்களுக்கு சேவையாற்றி வருகிறது. மேலும் மாவட்டத்தில் 751 ரேஷன் கடைகள் கூட்டுறவுத்துறையின் மூலம் நடத்தப்படுகிறது. இக்கடைகளின் வாயிலாக 4,33,269 குடும்ப அட்டைதாரர்களுக்கு அரிசி, சர்க்கரை, துவரம்பருப்பு, கோதுமை, பாமாயில், மண்ணெண்ணெய் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் சிறப்பாக வழங்கப்பட்டு வருகிறது. கூட்டுறவுத்துறையின் மூலம் (2022-2023) -ம் ஆண்டிற்கு 29,258 விவசாய உறுப்பினர்களுக்கு ரூ.250 கோடி அளவிற்கு குறுகிய கால பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது.
இது கடந்த ஆண்டை விட ரூ.62 கோடியே 46 லட்சம் கூடுதலாகும் என்றார். .கூட்டத்தில் மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் புவனேஸ்வரி, ஆவின் சேர்மன் ஆறுமுகம், மாவட்ட வருவாய் அலுவலர் சத்தியநாராயணன், கள்ளக்குறிச்சி-2 கூட்டுறவு சர்க்கரை ஆலை மேலாண்மை இயக்குனர் முருகேசன், கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் மீனா அருள், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக முதுநிலை மண்டல மேலாளர் மலர்விழி, திருக்கோவிலூர் துணைப்பதிவாளர் கீர்த்தனா, கள்ளக்குறிச்சி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய மேலாண் இயக்குனர் நிர்மல், தி.மு.க.கள்ளக்குறிச்சி வடக்கு மாவட்ட துணை செயலாளர் வாணியந்தல் ஆறுமுகம், தெற்கு மாவட்ட அவைத் தலைவர் ராமமூர்த்தி, மாநில செயற்குழு உறுப்பினர் முருகன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.