"7,000 டன் நெல்மூட்டைகள் மாயமாகவில்லை"- கலெக்டர் சாந்தி விளக்கம்


7,000 டன் நெல்மூட்டைகள் மாயமாகவில்லை- கலெக்டர் சாந்தி விளக்கம்
x

தர்மபுரி, அரசு கிடங்கில் 7,000 டன் நெல் மூட்டைகள் காணாமல் போன விவகாரம் குறித்து கலெக்டர் சாந்தி விளக்கம் அளித்துள்ளார்.

தர்மபுரி,

தர்மபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் பின்புறம் தமிழ்நாடு வாணிப கழக திறந்த வெளி குடோனில் 22 ஆயிரம் நெல் மூட்டைகள் அடுக்கி வைக்கப்பட்டுள்ளன. அதில் 7 ஆயிரம் மூட்டைகள் மாயமானதாக புகார் எழுந்தது. இதனால் தர்மபுரி மாவட்டத்தில் பரபரப்பு நிலவியது. இந்த நிலையில், நெல் மூட்டைகள் மாயமானதாக கூறப்பட்ட தருமபுரி வாணிப கழக திறந்த வெளி குடோனில் இன்று மாவட்ட கலெக்டர் சாந்தி மற்றும் அதிகாரிகள் இன்று நேரில் சென்று ஆய்வு செய்தனர்.

அதன் பின்னர் கலெக்டர் சாந்தி செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

தமிழ்நாடு வாணிப கழக சார்பில் தருமபுரி மாவட்டத்திற்கு 22 ஆயிரம் நெல் மூட்டைகள் தஞ்சை, நாகப்பட்டிணம் ஆகிய டெல்டா மாவட்டங்களில் இருந்து ரெயில் மூலம் வரவழைக்கப்பட்டது. இந்த நெல் மூட்டைகளை கலெக்டர் அலுவலகம் பின்புறம் அமைந்துள்ள மாவட்ட வாணிப கழக திறந்த வெளி குடோனில் வைக்கப்பட்டு பாதுகாக்கப்படுகிறது.

இந்த குடோனில் இருந்த 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமானதாக தகவல்களை பரப்பினர். இதுகுறித்து எழுந்த புகார் காரணமாக விஜிலென்ஸ் அதிகாரிகளும் விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து ஆய்வு செய்வதற்காக இன்று இங்கு வந்து பார்வையிட்டபோது, 7 ஆயிரம் நெல் மூட்டை மாயமாக வாய்ப்பில்லை. ஏனென்றால், ஒரு அட்டிக்கு 3 ஆயிரம் நெல் மூட்டைகள் வரை அடுக்கி வைக்கப்படுவது வழக்கம். ஆனால், தற்போது அடுக்கி வைக்கப்பட்டுள்ள முறையில் ஒரு சில அட்டிகளில் 3 ஆயிரத்திற்கும் மேலாக இருக்கும், சில அட்டிகளில் 2500-க்கும் குறைவாக மூட்டைகள் அடுக்கி வைக்கப்படும்.

அவ்வாறு குறைவாக அடுக்கி வைக்கப்பட்ட நெல் மூட்டைகளை ஒரு சிலர் தவறுதலாக எண்ணி விட்டு நெல் மூட்டைகள் மாயமானது தெரியவந்ததாக திரித்து எங்கள் மீது உள்ள காழ்புணர்ச்சி காரணமாக புகார் தெரிவித்துள்ளனர். இதுதொடர்பாகதான் அதிகாரிகள் வந்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், குடோனில் எந்த மூட்டைகளும் மாயமாகவில்லை.

சரிந்து கிடக்கும் மூட்டைகளை சரிசெய்யும் பணியும் நடைபெற்று வருகிறது. 7 ஆயிரம் நெல் மூட்டைகள் மாயமாகி இருப்பது வதந்தியான செய்தியாகும். தற்போது நெல்மூட்டைகள் அரவைக்கு அனுப்பி வைக்கும் பணி நடைபெற்று வருகிறது. மேலும், நெல் மூட்டைகள் மாயமான சம்பவம் குறித்தும் விசாரணை நடத்தவும், மாவட்டத்தில் உள்ள 80 அரிசி ஆலைகளிலும் ஆய்வு செய்யவும் அதிகாரிகளுக்கும் உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story