145 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.72½ லட்சம் நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்


145 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.72½ லட்சம் நலத்திட்ட உதவிகள்- அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்
x

ஈரோடு மாவட்டத்தில் 145 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.72½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

ஈரோடு

ஈரோடு மாவட்டத்தில் 145 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.72½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

மாற்றுத்திறனாளிகளுக்கு உதவிகள்

ஈரோடு மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நலத்திட்டங்கள் வழங்கும் நிகழ்ச்சி கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடந்தது. கலெக்டர் ராஜகோபால் சுன்கரா தலைமை தாங்கினார்.

மாநகராட்சி மேயர் சு.நாகரத்தினம் சுப்பிரமணியம், ஏ.ஜி.வெங்கடாசலம் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் தமிழ்நாடு வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற மேம்பாட்டுத்துறை, மதுவிலக்கு -ஆயத்தீர்வை அமைச்சர் சு.முத்துசாமி கலந்து கொண்டு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். 35 மாற்றுத்திறனாளிகளுக்கு தலா ரூ.83 ஆயிரத்து 500 மதிப்புள்ள இணைப்பு சக்கரம் பொருத்தப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. 15 பேருக்கு தலா ரூ.1 லட்சத்து 6 ஆயிரம் மதிப்புள்ள பேட்டரியால் இயங்கும் சக்கர நாற்காலி வழங்கப்பட்டது.

145 பேர்

தண்டுவடம் பாதிக்கப்பட்ட 20 பேருக்கு தலா ரூ.1 லட்சத்து 5 ஆயிரத்து 500 மதிப்பிலான சிறப்பு வடிவமைப்பு செய்யப்பட்ட ஸ்கூட்டர் வழங்கப்பட்டது. 50 பெண்களுக்கு தலா ரூ.6 ஆயிரத்து 840 மதிப்பிலான தையல் எந்திரங்கள் வழங்கப்பட்டன. பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளிகள் 25 பேருக்கு தலா ரூ.11 ஆயிரத்து 488 மதிப்பிலான பிரெய்லி செயலியுடன் கூடிய செல்போன் என மொத்தம் 145 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.72 லட்சத்து 51 ஆயிரத்து 700 மதிப்பில் நலத்திட்ட உதவிகளை அமைச்சர் சு.முத்துசாமி வழங்கினார்.

நிகழ்ச்சியில் ஈரோடு மாநகராட்சி துணை மேயர் வி.செல்வராஜ், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் நவமணி கந்தசாமி, துணைத்தலைவர் கஸ்தூரி, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அதிகாரி கோதைசெல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ரோடு பணி

முன்னதாக எளையாக்கவுண்டம்பாளையம், தோட்டாணி, புதுப்பாளையம் பகுதிகளில் நெடுஞ்சாலைத்துறையின் நபார்டு மற்றும் கிராமச்சாலைகள் திட்டத்தில் ரூ.1 கோடியே 19 லட்சம் மதிப்பீட்டில் ஊராட்சி ஒன்றிய ரோடுகளை தரம் உயர்த்தும் பணி தொடங்கியது.

இந்த பணிகளை அமைச்சர் சு.முத்துசாமி தொடங்கி வைத்தார். நிகழ்ச்சிகளில் கோட்ட பொறியாளர் முருகேசன், உதவி கோட்ட பொறியாளர் சிவராஜ், தாசில்தார் ஜெயக்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story