"மழைக்கு முன்னரே 75% வடிகால் பணிகள் விரைவில் முடிக்கப்படும்" - அமைச்சர் கே.என்.நேரு

சென்னையில் மழை தொடங்கும் முன்பாக 75 சதவிகித வடிகால் பணிகள் முடிக்கப்படும் என்று அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
சென்னை,
பெருங்குடி 14வது மண்டலத்திற்கு உட்பட்ட மடிப்பாக்கம் 187 மற்றும் 188வது வார்டுகளில் 249 கோடியே 47 லட்சம் ரூபாய் செலவில் 570 தெருக்களில் பாதாள சாக்கடை திட்டப்பணிகளுக்கான தொடக்க விழா நடந்தது. சென்னை மாநகராட்சி மேயர் பிரியா தலைமையில் விழா நடைபெற்றது. இதில் அமைச்சர்கள் கே.என்.நேரு, மா. சுப்பிரமணியன் ஆகியோர் கலந்து கொண்டு பாதாள சாக்காடை பணிகளை தொடங்கி வைத்தனர்.
அதன் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் அமைச்சர் கே.என்.நேரு கூறியதாவது:-
சென்னையில் எங்கு பார்த்தாலும் மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு முதல்-அமைச்சர் எடுத்த நடவடிக்கையே காரணம். வடிகால் அமைக்கும் பணிகளை முடிப்பதில் காலதாமதம் நிலவுகிறது. வடிகால் பணிகளை விரைவில் முடித்திட அதிகாரிகளுக்கு அறிவுறுத்தி உள்ளோம். சென்னையில் மழை தொடங்கும் முன்பாக 75 சதவிகித மழைநீர் வடிகால் பணிகள் முடிக்கப்படும்.
இவ்வாறு அவர் கூறினார்.






