செங்கல்பட்டு மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி 75 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது - அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேச்சு
செங்கல்பட்டு மாவட்டத்தில் 2-வது தவணை தடுப்பூசி 75 சதவீதம் பேருக்கு செலுத்தப்பட்டுள்ளது என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.
செங்கல்பட்டு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் கொரோனா தொற்று தடுப்புபணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தலைமையில் நேற்று நடைபெற்றது.
இதில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசியதாவது:-
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல் தவணை தடுப்பூசி 94.38 சதவீதம் பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 84.88 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது. செங்கல்பட்டு மாவட்ட அளவில் முதல் தவணை தடுப்பூசி 92 சதவீதம் பேருக்கும், 2-வது தவணை தடுப்பூசி 75 சதவீதம் பேருக்கும் செலுத்தப்பட்டுள்ளது.
நேற்று இந்த ஆய்வின்போது எந்த பகுதிகளில் தடுப்பூசி செலுத்தும் பணி தொய்வு உள்ளதோ அந்த இடங்களை கண்டறிந்து தடுப்பூசி செலுத்தும் பணியை விரைவுபடுத்த அறிவுறுத்தப்பட்டது. மேலும் 2 நபர்களுக்கு மேல் தொற்று பாதித்த 11 பகுதிகள் கண்டறிந்து அந்த பகுதிகளை தீவிரமாக கண்காணித்து தொற்று உள்ளவர்களின் வீடுகளின் ஒட்டு வில்லைகள் ஒட்டுதல் போன்ற பணிகளும் மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மாவட்டத்தில் முககவசம் அணிதல், சமூக இடைவெளியை பின்பற்றுதல் போன்ற கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை சரியாக பின்பற்ற விழிப்புணர்வு ஏற்படுத்த அறிவுறுத்தப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டத்தில் 500 நபர்களுக்கு கொரோனா தொற்று பரிசோதனை செய்யப்பட்டதில் 95 நபர்களுக்கு நோய்தொற்று உள்ளது உறுதி செய்யப்பட்டு, அவர்களுடன் தொடர்பில் இருந்தவர்கள் கண்டறியப்பட்டு பரிசோதனை செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே, மாவட்டத்தில் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை அதிகபடுத்த அறிவுறுத்தப்பட்டது.
மேலும் கொரோனா கேர்-சென்டர் தயார் செய்வது குறித்து ஆய்வு செய்யப்பட்டது. இதில் தாம்பரம் காசநோய் ஆஸ்பத்திரியில் 100 ஆக்ஸிஜன் சிலிண்டர் வசதியுடன் கூடிய படுக்கைகள் தயார் நிலையில் உள்ளது. மேலும், சித்த மருத்துவமனையில் 200 படுக்கைகளும், செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் 100 படுக்கைகள் என செங்கல்பட்டு மாவட்டத்தில் 400 படுக்கைகள் கொரோனா நோயாளிகளுக்கு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதில் காஞ்சீபுரம் எம்.பி. செல்வம், செங்கல்பட்டு தொகுதி எம்.எல்.ஏ. வரலட்சுமி மதுசூதனன், தாம்பரம் தொகுதி எம்.எல்.ஏ. எஸ்.ஆர்.ராஜா, பல்லாவரம் தொகுதி எம்.எல்.ஏ. இ.கருணாநிதி, தாம்பரம் மாநகராட்சி மேயர் வசந்தகுமாரி கமலகண்ணன், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை, அரசு முதன்மை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட கலெக்டர் ராகுல் நாத், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை, இயக்குனர் டாக்டர் செல்வவிநாயகம், மாவட்டவருவாய் அலுவலர் மேனுவல் ராஜ், செங்கல்பட்டு துணை கலெக்டர் (பயிற்சி) சஜிவணா, தாம்பரம் மாநகராட்சி துணை மேயர் காமராஜ், செங்கல்பட்டு நகர்மன்ற தலைவர் தலைவர் தேன்மொழி நரேந்திரன், மறைமலைநகர் நகர்மன்ற தலைவர் சண்முகம், மற்றும் பலர் இருந்தனர்.