ஜல்லிக்கட்டு மைதான பணிகள் 80 சதவீதம் நிறைவு-அமைச்சர் மூர்த்தி தகவல்


ஜல்லிக்கட்டு மைதான பணிகள் 80 சதவீதம் நிறைவு-அமைச்சர் மூர்த்தி தகவல்
x

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதான பணிகளை அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு செய்தார். 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றதாக தெரிவித்தார்.

மதுரை

அலங்காநல்லூர் அருகே ஜல்லிக்கட்டு மைதான பணிகளை அமைச்சர் மூர்த்தி நேரில் ஆய்வு செய்தார். 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றதாக தெரிவித்தார்.

அமைச்சர் ஆய்வு

அலங்காநல்லூர் அருகே கீழக்கரை கிராமத்தில் வகுத்து மலை, அடிவாரத்தில் பிரமாண்டமாக கட்டப்பட்டு வரும் ஜல்லிக்கட்டு மைதான பணிகளை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி நேற்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். மாவட்ட கலெக்டர் சங்கீதா, சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் வெங்கடேசன் மற்றும் பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை, வருவாய்த்துறை, நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள், அலுவலர்கள், பணியாளர்கள், உடனிருந்தனர்.

தொடர்ந்து காளைகள் நிறுத்தப்படும் இடம், மாடுகள் வெளியேறும் வாடிவாசல், மருத்துவ வசதி, குடிநீர் வசதி, காளைகள், மற்றும் வீரர்கள் ஓய்வு எடுக்கும் இடங்கள், வாகனங்கள் வரிசைபடுத்தும் பகுதிகள், உள்ளிட்ட பல்வேறு கட்டுமான பணிகள் நடைபெறுவதை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

80 சதவீத பணிகள் நிறைவு

இதுகுறித்து அமைச்சர் பி.மூர்த்தி கூறியதாவது:-

தமிழர்களின் வீர விளையாட்டின் அடையாளமான ஜல்லிக்கட்டுக்கு மைதானம் அமைக்கப்படும் என முதல்-அமைச்சர் சட்டசபையில் அறிவித்தபடி 66 ஏக்கர் பரப்பளவில் ரூ.44.6 கோடி மதிப்பீட்டில் திட்ட பணிகள் தொடங்கப்பட்டு தொடர்ந்து நடைபெற்று வருகிறது. தற்போது 80 சதவீத பணிகள் நிறைவு பெற்றுள்ளது. இந்த ஆண்டு இறுதிக்குள் பணிகள் முழுவதுமாக நிறைவு பெறும். தர கட்டுப்பாட்டு அதிகாரிகள் கட்டுமான பணிகளை ஆய்வு செய்துள்ளனர்.

தற்போது மைதான நுழைவு வாயில் வளைவு, மழைநீர் வடிகால் வசதி, செயற்கை புல்தரை, குடிநீர் வசதி, 50 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தண்ணீர் மேல்நிலை தொட்டி, கால்நடை மருத்துவ வசதி, உள்ளிட்ட பல்வேறு பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

மைதானத்திற்கு விரைந்து வர புதிதாக சாலை அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதற்காக ரூ.22 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு அந்த பணிகளும் வேகமாக நடைபெற்று வருகிறது.

இவ்வாறு அமைச்சர் மூர்த்தி தெரிவித்தார்.

கலந்து கொண்டவர்கள்

இந்த ஆய்வின் போது மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் சாலிதளபதி, தி.மு.க. மாவட்ட அவை தலைவர் பாலமேடு பாலசுப்பிரமணியன், நகர் செயலாளர்கள் ரகுபதி, மனோகரவேல் பாண்டியன், செயற்குழு உறுப்பினர் முத்தையன், பேரூராட்சி தலைவர்கள் ரேணுகாஈஸ்வரி கோவிந்தராஜ், சுமதிபாண்டியராஜன், ஒன்றிய அவை தலைவர் நடராஜன் உள்ளிட்ட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.


Related Tags :
Next Story