மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.82 கோடி கடனுதவி


மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.82 கோடி கடனுதவி
x

கடலூர் மாவட்டத்தில் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் ரூ.82 கோடி கடனுதவி வழங்கினர்.

கடலூர்

வங்கி கடனுதவி

தமிழகம் முழுவதும் மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியை திருச்சியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று தொடங்கி வைத்தார்.

இதையொட்டி, கடலூரில் சுய உதவி குழுவினருக்கு கடனுதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திருச்சியில் நடந்த நிகழ்ச்சி காணொலி காட்சி மூலமாக நடைபெற்றது.

தொடர்ந்து, கடலூர் நிகழ்ச்சிக்கு கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். கூடுதல் கலெக்டர் (வளர்ச்சி) பவன்குமார் கிரியப்பனவர், எம்.எல்.ஏ.க்கள் அய்யப்பன், சபா.ராஜேந்திரன், மாநகராட்சி துணை மேயர் தாமரைச்செல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மகளிர் திட்ட இயக்குனர் செந்தில் வடிவு வரவேற்றார்.

சிறப்பு அழைப்பாளர்களாக அமைச்சர்கள் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், சி.வெ.கணேசன் ஆகியோர் கலந்து கொண்டு மகளிர் சுய உதவி குழுக்களுக்கு வங்கி கடன் உதவிக்கான ஆணையை வழங்கினர்.

இதில் மாவட்டத்தில் உள்ள 539 சுய உதவி குழுக்கள் மற்றும் 84 ஊராட்சி அளவிலான கூட்டமைப்பை சேர்ந்த 7,284 பேருக்கு ரூ.82 கோடியே 45 லட்சம் கடனுதவி வழங்கப்பட்டது.

சொத்தில் சம பங்கு

பின்னர் அமைச்சர் சி.வெ.கணேசன் பேசுகையில், மறைந்த முன்னாள் முதல்-அமைச்சர் கருணாநிதி பெண்கள் நலனுக்காக 1989-ம் ஆண்டு பெண்களுக்கும் சொத்தில் சம பங்கு உண்டு என்ற சட்டத்தை நிறைவேற்றினார். அதனை படிப்படியாக மாற்றி தற்போதைய முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி உள்ளிட்ட அனைத்து பதவியிடங்களிலும் 50 சதவீதத்தை பெண்களுக்கு அளித்துள்ளார்.

அரசு வேலை வாய்ப்பிலும் பெண்களுக்கு 40 சதவீதம் முன்னுரிமை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் படிக்கின்ற கல்லூரி மாணவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் அவர்களது வங்கி கணக்கில் செலுத்தப்படுகிறது. ஒரு நாடு வளர்ச்சி பெற வேண்டும் என்றால் பெண்கள் முன்னேற வேண்டும். தற்போது கடலூர் மாவட்டத்தில் குறிஞ்சிப்பாடி ஒன்றியத்தில் உள்ள மகளிர் சுயஉதவிக்குழு தமிழ்நாட்டிலேயே சிறந்த சுயஉதவிக்குழுவுக்கான மணிமேகலை விருதை பெற்றுள்ளது. எனவே அரசின் நலத்திட்டங்களை பயன்படுத்தி பெண்கள் முன்னேற வேண்டும் என்றார்.

பொங்கல் தொகுப்பில் குறைபாடு

அதனை தொடர்ந்து அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பேசுகையில், மகளிர் சுய உதவிக்குழுவினர் கைவினை பொருட்களை தயாரித்து, அதனை அனைத்து இடங்களுக்கும் கொண்டு சென்று விற்பனை செய்ய வேண்டும். மேலும் விற்பனை அங்காடியும் அமைக்கப்படும். கடந்த ஆண்டு வழங்கப்பட்ட பொங்கல் தொகுப்பில் சில குறைபாடுகள் இருந்ததாக கூறி, அதனை ஊதி பெரிதாக்கி விட்டனர்.

அதனால் தான் இந்த முறை பொங்கல் தொகுப்பு வழங்காமல் சர்க்கரை, பச்சரிசியுடன் ரூ.1000 வழங்கப்படுகிறது. அதிலும் கரும்பு வழங்கவில்லை என ஊதி பெரிதாக்கிவிட்டனர். அதனால் மக்களின் கோரிக்கையை ஏற்று பொங்கல் தொகுப்புடன் கரும்பும் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்துள்ளார்.

தற்போது சிறு சிறு சம்பவங்களை கூட ஊதி பெரிதாக்கி அரசியல் செய்கின்றனர். கடந்த ஆட்சி காலத்தில் என்ன தான் ஒரு சம்பவத்தை ஊதி பெரிதாக்கினாலும், அதனை அப்போதைய ஆட்சியாளர்கள் கண்டுகொள்ளாமல், மக்களுக்கு எவ்வித நலத்திட்டங்களும் செய்யவில்லை. தற்போது மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு மகளிர் மேம்பாட்டுக்காக பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகிறது என்றார்.

இதில் கோட்டாட்சியர் அதியமான் கவியரசு, தி.மு.க. மாநகர செயலாளர் ராஜா, தெற்கு ஒன்றிய செயலாளர் விஜயசுந்தரம், மண்டல குழு தலைவர்கள் பிரசன்னா, சங்கீதா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story