சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம்


சென்னை மாநகராட்சி பள்ளிகளின் தேர்ச்சி சதவீதம்
x
தினத்தந்தி 21 Jun 2022 9:02 AM IST (Updated: 21 Jun 2022 9:04 AM IST)
t-max-icont-min-icon

சென்னை மாநகராட்சி பள்ளிகளில் 12ம் வகுப்பில் 86.53 சதவீதமும், 10-ம் வகுப்பில் வகுப்பில் 75.84 சதவீத தேர்ச்சியும் பெற்றுள்ளன.

சென்னை

பெருநகர சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-

சென்னை மாநகராட்சி கல்வித்துறையின் கீழ் 32 மேல்நிலைப்பள்ளிகளும், 38 உயர்நிலைப்பள்ளிகளும் செயல்பட்டு வருகின்றன. அந்த வகையில் 2020-2021 ஆண்டிற்கான 12-ம் வகுப்பு அரசு பொது தேர்வை 5 ஆயிரத்து 642 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில் 1,975 மாணவர்கள், 2 ஆயிரத்து 907 மாணவிகள் என மொத்தம் 4 ஆயிரத்து 882 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களின் தேர்ச்சி சதவீதம் 86.53 ஆகும்.

தேர்ச்சி விகிதத்தில் புலியூர் சென்னை மேல்நிலைப்பள்ளி 98.61 சதவீதத்துடன் முதல் இடத்தையும், சைதாப்பேட்டை சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளி 98.28 சதவீதத்துடன் 2-வது இடத்தையும், புல்லா அவென்யூ சென்னை மேல்நிலைப்பள்ளி 97.63 சதவீதத்துடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.

இதேபோல் இந்த ஆண்டு நடந்த 10-ம் வகுப்பு அரசு பொது தேர்வை 6 ஆயிரத்து 448 மாணவ-மாணவிகள் எழுதினர். இதில் 2 ஆயிரத்து 262 மாணவர்கள், 2 ஆயிரத்து 628 மாணவிகள் என மொத்தம் 4 ஆயிரத்து 890 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இவர்களின் தேர்ச்சி சதவீதம் 75.84 ஆகும்.

தேர்ச்சி விகிதத்தில் சூளைமேடு சென்னை உயர்நிலைப்பள்ளி 100 சதவீதத்துடன் முதலிடத்திலும், வண்ணாரப்பேட்டை சென்னை உருது உயர்நிலைப்பள்ளி 97.67 சதவீதத்துடன் 2-வது இடத்தையும், புல்லா அவென்யூ சென்னை உயர்நிலைப்பள்ளி 97.56 சதவீதத்துடன் 3-வது இடத்தையும் பிடித்துள்ளன.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story