பெரம்பலூர் அருகே 25 கிலோ கஞ்சா கடத்திய 9 பேர் கைது


பெரம்பலூர் அருகே 25 கிலோ கஞ்சா கடத்திய 9 பேர் கைது
x

பெரம்பலூர் அருகே 25 கிலோ கஞ்சாவை கடத்திய 9 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும், கார்-ஷேர் ஆட்டோ ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

பெரம்பலூர்

ரகசிய தகவல்

ஆந்திராவில் இருந்து ராணிப்பேட்டை வழியாக பெரம்பலூருக்கு சிலர் கஞ்சா கடத்தி வருவதாக பெரம்பலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஷ்யாம்ளா தேவிக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து, அவரது உத்தரவின் ேபரில் பெரம்பலூர் உட்கோட்ட போலீஸ் துணை சூப்பிரண்டு பழனிச்சாமி மேற்பார்வையில் பாடாலூர் இன்ஸ்பெக்டர் மணியண்ணன், சப்-இன்ஸ்பெக்டர் பால்கர், பெரம்பலூர் சப்-இன்ஸ்பெக்டர் சண்முகம் உள்ளிட்ட போலீசார் பெரம்பலூர் வழியாக சந்தேகத்திற்குரிய வகையில் சென்ற காரை விரட்டி சென்றனர்.

அப்போது பெரம்பலூர் மாவட்டம் பாடாலூர் அருகே செட்டிகுளம் பகுதியில் உள்ள பஸ் நிறுத்தம் அருகே கஞ்சா கடத்தி வரப்பட்ட காரில் இருந்து கஞ்சா பொட்டலங்களை, ஒரு ஷேர் ஆட்டோவிற்கு 9 பேர் கொண்ட கும்பல் மாற்றி கொண்டு இருந்தது. அப்ேபாது அந்த கும்பலை போலீசார் மடக்கி பிடித்து கைது செய்தனர்.

25 கிலோ கஞ்சா பறிமுதல்

விசாரணையில் அவர்கள் செட்டிகுளம் கிராமம் மலையடிவாரம் பகுதியை சேர்ந்த மாயழகு என்பவரது மகன் மதியழகன் (வயது 35), செட்டிகுளத்தை சேர்ந்த தர்மலிங்கம் என்பவரது மகன் நாகப்பா (45), எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஆறுமுகம் மகன் கமல் (30), ராதாகிருஷ்ணன் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் தமிழ்செல்வன் (48), வேப்பந்தட்டை தாலுகா அன்னமங்கலத்தை சேர்ந்த பெரியசாமி மகன் சந்தோஷ்குமார் (34), ஆலத்தூர் தாலுகா பெருமாள் கோவிலை சேர்ந்த சுந்தராசு மகன் சசிகுமார் (27), பொம்மனப்பாடி கிராமத்தை சேர்ந்த மாணிக்கம் என்பவரது மகன் அசோக்குமார் (26), பெரம்பலூர் வடக்கு மாதவி சாலையை சேர்ந்த மெகபூ பாஷா என்பவரது மகன் ஷாஜகான் (52)

திருவாரூர் மாவட்டம் ஆலங்காடு பகுதியை சேர்ந்த சுப்ரமணியன் மகன் சுதாகர் (43) என்பது தெரியவந்தது.

இவர்களிடமிருந்து ரூ.25 லட்சம் மதிப்புள்ள 25 கிலோ கஞ்சா பொட்டலங்கள் மற்றும் கஞ்சா கடத்தி வர பயன்படுத்திய கார் மற்றும் காரில் இருந்து ஷேர் ஆட்டோவிற்கு கஞ்சா பொட்டலங்களை மாற்றம் செய்வதற்கு பயன்படுத்திய ஷேர் ஆட்டோ ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.

போலீசார் விசாரணை

இதில் பெரம்பலூர் வடக்குமாதவி சாலையை சேர்ந்த ஷாஜகான், தனது காரில் கஞ்சா பொட்டலங்களை ராணிப்பேட்டையில் இருந்து கடத்தல் கும்பல் உதவியுடன் மொத்தமாக வாங்கி வந்துள்ளார். பிறகு கஞ்சா வியாபாரிகளுக்கு வினியோகம் செய்வதற்கு செட்டிகுளத்திற்கு அதே காரில் எடுத்து சென்றுள்ளது போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது. கைதான 9 பேரும் பாடாலூர் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர்.

இந்த சம்பவம் குறித்து பாடாலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story