48 மணி நேரத்தில் சென்னையில் 90 சதவீத மழைநீர் பாதிப்புகள் அகற்றம்:தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி


48 மணி நேரத்தில் சென்னையில் 90 சதவீத மழைநீர் பாதிப்புகள் அகற்றம்:தமிழக அரசுக்கு கே.எஸ்.அழகிரி
x

கடந்த 48 மணி நேரத்தில் சென்னை மாநகரில் 90 சதவீத மழைநீர் வெள்ள பாதிப்புகள் அகற்றப்பட்டிருப்பதை பாராட்டுகிறேன் என்று கே.எஸ் அழகிரி தெரிவித்துள்ளார்.

சென்னை,

தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை போர்க்கால அடிப்படையில் எடுத்த காரணத்தால், தற்போதைய பெருமழையின் காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளில் இருந்து மக்கள் பாதுகாக்கப்பட்டுள்ளனர். கடந்த 48 மணி நேரத்தில் சென்னை மாநகரில் 90 சதவீத மழைநீர் வெள்ள பாதிப்புகள் அகற்றப்பட்டிருப்பதை பாராட்டுகிறேன்.

தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழையின் காரணமாக பல்வேறு மாவட்டங்கள் பாதிக்கப்பட்டிருந்தாலும் கடலூர் மாவட்டம், சிதம்பரம் வட்டாரத்தில் கடும் பாதிப்பு ஏற்பட்டு குறிப்பாக, விவசாயிகள் பல்வேறு இடர்பாடுகளுக்கு ஆளாகியுள்ளனர். சிதம்பரம், சீர்காழி, மயிலாடுதுறை, கும்பகோணம், மன்னார்குடி, திருவாரூர் உள்ளிட்ட காவிரி டெல்டா பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வருவதால் நெற் பயிர்கள் மட்டுமின்றி நாற்றங்காலில் உள்ள நாற்றுகள் முழுவதுமாக அழுகி போயிருக்கிறது. நடவு நட்டு 20 நாட்கள் ஆனபிறகு நெற் பயிர்கள் தண்ணீரில் மூழ்கி வீணாகி உள்ளது.

கடந்த 10 நாட்களாக பெய்து வருகிற கனமழை காரணமாக 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏக்கர் சம்பா பயிர் தண்ணீரில் மூழ்கி உள்ளது. கடும் மழையினால் பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு பயிர் காப்பீட்டுத் தொகை வழங்குவது உள்ளிட்ட அனைத்து நிவாரண நடவடிக்கைகளை மேற்கொள்வதோடு, ஈரப்பதம் உள்ள, மகசூல் செய்யப்பட்ட நெல்லை வாங்குவதற்கு அரசு கொள்முதல் நிலையங்களை அதிக அளவில் திறக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


Next Story