918 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்பட்டு ஆரோக்கியம் கண்காணிப்பு


918 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்பட்டு ஆரோக்கியம் கண்காணிப்பு
x
தினத்தந்தி 26 Jun 2023 12:15 AM IST (Updated: 26 Jun 2023 12:16 AM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையான ஊட்டச்சத்து குறைவால் பாதிக்கப்பட்ட 918 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்பட்டு அவர்களது ஆரோக்கியம் கண்காணிக்கப்பட்டு வருகிறது என்று கலெக்டர் சி.பழனி தெரிவித்துள்ளார்.

விழுப்புரம்

விழுப்புரம்

விழுப்புரம் மாவட்ட கலெக்டர் சி.பழனி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

செறிவூட்டப்பட்ட பிஸ்கட்

தமிழ்நாட்டின் எதிர்கால சந்ததியர்கள் மற்றும் குழந்தைகளின் நலனை காத்திடும் வகையில் 6 மாதம் முதல் 6 வயது வரை கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உடைய குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்படும் என முதல்-அமைச்சர் அறிவித்தார். அதனடிப்படையில் விழுப்புரம் மாவட்டத்தில் கடுமையான ஊட்டச்சத்துள்ள குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கி இத்திட்டம் தொடங்கி வைக்கப்பட்டது.

தமிழ்நாட்டில் உள்ள அங்கன்வாடி மையங்களில் 36 லட்சம் குழந்தைகள் பயின்று வருகின்றனர். இக்குழந்தைகளுக்கு மருத்துவத்துறை மற்றும் சுகாதாரத்துறை சார்பில் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதில் 1,11,000 குழந்தைகளுக்கு கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு இருப்பது கண்டறியப்பட்டது. இக்குழந்தைகளுக்கு தேவையான ஊட்டச்சத்தை உறுதி செய்திடும் வகையில் செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்பட வேண்டும் என முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருந்தார்.இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் குழந்தைகள் நலனில் அக்கறை கொண்டு இதுபோன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

ஆரோக்கியம் கண்காணிப்பு

விழுப்புரம் மாவட்டத்தில் செஞ்சி ஒன்றியத்தில் 18 குழந்தைகளுக்கும், காணை ஒன்றியத்தில் 166 குழந்தைகளுக்கும், கண்டமங்கலம் ஒன்றியத்தில் 11 குழந்தைகளுக்கும், கோலியனூர் ஒன்றியத்தில் 123 குழந்தைகளுக்கும், மயிலம் ஒன்றியத்தில் 78 குழந்தைகளுக்கும், மரக்காணம் ஒன்றியத்தில் 113 குழந்தைகளுக்கும், மேல்மலையனூர் ஒன்றியத்தில் 69 குழந்தைகளுக்கும், முகையூர் ஒன்றியத்தில் 78 குழந்தைகளுக்கும், ஒலக்கூர் ஒன்றியத்தில் 34 குழந்தைகளுக்கும், திருவெண்ணெய்நல்லூர் ஒன்றியத்தில் 64 குழந்தைகளுக்கும், வல்லம் ஒன்றியத்தில் 10 குழந்தைகளுக்கும், வானூர் ஒன்றியத்தில் 94 குழந்தைகளுக்கும், விக்கிரவாண்டி ஒன்றியத்தில் 39 குழந்தைகளுக்கும், விழுப்புரம் நகரத்தில் 21 குழந்தைகள் என மொத்தம் 918 குழந்தைகளுக்கு செறிவூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கப்பட்டுள்ளது. கடுமையான ஊட்டச்சத்து குறைபாடு உடைய 2 வயது வரை உள்ள குழந்தைகளுக்கு 60 கிராம் எடையுள்ள பிஸ்கட்டையும், 2 வயதிற்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு 30 கிராம் எடையுள்ள பிஸ்கட்டும் வழங்கப்படுவதோடு தொடர்ந்து 56 நாட்கள் வழங்கப்பட்டு குழந்தைகளின் ஆரோக்கியம் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


Next Story