ஏரிகளில் 92 சதவீதம் தண்ணீர் இருப்பு: ஆண்டு முழுவதும் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது - பொதுப்பணித்துறை அதிகாரிகள்


ஏரிகளில் 92 சதவீதம் தண்ணீர் இருப்பு: ஆண்டு முழுவதும் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது - பொதுப்பணித்துறை அதிகாரிகள்
x

சென்னைக்கு குடிநீர் வழங்கும் ஏரிகளில் 91.8 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளதால் ஆண்டு முழுவதும் குடிநீர் பிரச்சினை ஏற்படாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.

சென்னை

91.8 சதவீதம் தண்ணீர் இருப்பு

சென்னை நகர மக்களின் முக்கிய குடிநீர் ஆதாரமாக பூண்டி, புழல், செம்பரம்பாக்கம், சோழவரம், கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரிகள் உள்ளன. இந்த 5 ஏரிகளில் மொத்தம் 11.757 டி.எம்.சி. தண்ணீர் சேமித்து வைக்கலாம். வடகிழக்கு பருவமழை மற்றும் மாண்டாஸ் புயல் காரணமாக சென்னை மற்றும் புறநகர் பகுதியில் பலத்த மழை கொட்டியது. இதனால் குடிநீர் வழங்கும் 5 ஏரிகளிலும் நீர் மட்டம் கிடுக்கிடு என உயர்ந்தது.

நேற்று காலை நிலவரப்படி 5 ஏரிகளிலும் மொத்தம் 10.793 டி.எம்.சி. தண்ணீர் இருப்பு உள்ளது. இது மொத்த கொள்ளளவில் 91.8 சதவீதமாகும்.

பூண்டி ஏரி

ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து பூண்டி ஏரிக்கு கிருஷ்ணா தண்ணீர் கடந்த மாதம் முதல் தொடர்ந்து வந்து கொண்டிருப்பதால் பூண்டி ஏரி அதன் முழு கொள்ளளவான 35 அடி முழுவதும் நிரம்பி உள்ளதால் அங்கிருந்து புழல், செம்பரம்பாக்கம் ஏரிகளுக்கு இணைப்பு கால்வாய் மூலம் வினாடிக்கு 550 கன அடி தண்ணீர் அனுப்பப்பட்ட வருகிறது.

செம்பரம்பாக்கம்

செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் தற்போது 23 அடியை நெருங்கி உள்ளது. ஏரியின் மொத்த உயரம் 24 அடி. இதில் 22.68 அடிக்கு தண்ணீர் நிரம்பி காணப்படுகிறது. ஏரிக்கு வினாடிக்கு 246 கன அடி தண்ணீர் வருகிறது. சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 130 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.

புழல்

புழல் ஏரியின் மொத்த உயரம் 21 அடி. இதில் 19.69 அடிக்கு தண்ணீர் உள்ளது. ஏரிக்கு வினாடிக்கு 351 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. சென்னை குடிநீர் தேவைக்காக வினாடிக்கு 187 கன அடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சோழவரம் ஏரியில் ஏரியில் மொத்த கொள்ளளவான 1.081 டி.எம்.சி.யில் 837 மில்லியன் கனஅடி தண்ணீர் உள்ளது.

தட்டுபாடு ஏற்படாது

இதைபோல் கண்ணன்கோட்டை - தேர்வாய் கண்டிகை ஏரியில் மொத்த கொள்ளளவான 500 மில்லியன் கனஅடியில் 486 மில்லியன் கனஅடி தண்ணீர் இருப்பது குறிப்பிடதக்கது.

5 ஏரிகளில் 91.8 சதவீதம் தண்ணீர் இருப்பு உள்ளதால் இந்த ஆண்டு முழுவதும் சென்னையில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்படாது என்று பொதுப்பணித்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.


Next Story