தண்ணீர் ெதாட்டியில் தவறி விழுந்து 1½ வயது பெண் குழந்தை பலி
பொள்ளாச்சி அருகே தண்ணீர் ெதாட்டியில் தவறி விழுந்து 1½ வயது பெண் குழந்தை பலியானது.
நெகமம்
பொள்ளாச்சி அருகே தண்ணீர் ெதாட்டியில் தவறி விழுந்து 1½ வயது பெண் குழந்தை பலியானது.
1½ வயது குழந்தை
கோவை மாவட்டம் பொள்ளாச்சி அருகே உள்ள நெகமம் பகுதியை சேர்ந்தவர் ஜோயல் ராஜா நோவா. இவருடைய மனைவி ஜாஸ்மின். இவர்கள் 2 பேரும், வங்கி ஊழியர்கள். இந்த தம்பதிக்கு 4 வயதில் ஜெபிமா கரோலின் மற்றும் 1½ வயதில் ஜெர்லின் என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தன.
இந்த நிலையில் நேற்று காலையில் ஜோயல் ராஜா நோவா தனது தந்தை சவுந்தர் சாமுவேலின் பராமரிப்பில் குழந்தைகளை விட்டுவிட்டு மனைவி ஜாஸ்மினுடன் வழக்கம்போல் வேலைக்கு புறப்பட்டு சென்றுவிட்டார்.
தண்ணீர் தொட்டி
இதையடுத்து வீட்டில் விளையாடி கொண்டு இருந்த குழந்தை ஜெர்லினை திடீரென காணவில்லை. இதனால் அதிர்ச்சி அடைந்த சவுந்தர் சாமுவேல் குழந்தையை பல இடங்களில் தேடி பார்த்தார். ஆனால் எங்கும் குழந்தை கிடைக்கவில்லை.
இதற்கிடையில் வீட்டில் உள்ள தரைமட்ட தண்ணீர் தொட்டியின் மேல் மூடி உடைந்திருந்தது. உடனே தொட்டிக்குள் அவர் எட்டி பார்த்தார். அப்போது தொட்டிக்குள் குழந்தை மூழ்கி கிடந்தது. உடனே குழந்தையை மீட்ட அவர், நெகமம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார்.
சிகிச்சை பலனின்றி...
அங்கு முதலுதவி சிகிச்சைக்கு பிறகு பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை டாக்டர்கள் அனுப்பி வைத்தனர். ஆனால் தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது.
இதுகுறித்து தகவல் அறிந்த நெகமம் போலீசார் விரைந்து சென்று, குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் நடத்திய முதற்கட்ட விசாரணையில், தண்ணீர் தொட்டி மீது ஏறி விளையாடியபோது மூடி உடைந்ததால், குழந்தை உள்ளே தவறி விழுந்து இறந்திருக்கலாம் என்பது தெரியவந்துள்ளது. எனினும் சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, தொடர்ந்துவிசாரணை நடத்தி வருகின்றனர்.