17 வயது சிறுவன் அதிரடி கைது
பரமத்திவேலூர்:-
ஆடு மேய்க்க சென்ற பெண் கொலை செய்யப்பட்டது தொடர்பாக 17 வயது சிறுவன் அதிரடியாக கைது செய்யப்பட்டார். அவனிடம் நடத்திய விசாரணையில் கற்பழித்து தீர்த்துக்கட்டியது அம்பலமாகி உள்ளது.
பெண் கொலை
நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையம் பகுதியை சேர்ந்த விவேகானந்தன் மனைவி நித்யா (வயது 27). இவர்களுக்கு தனுஸ்ரீ (7), சுபஸ்ரீ (3) என்ற 2 பெண் குழந்தைகள் உள்ளனர். நித்யா கடந்த சனிக்கிழமை மதியம் ஆடுகள் மேய்ப்பதற்காக கரப்பாளையம் பகுதிக்கு சென்றார்.
மாலையில் வீடு திரும்பாததால் கணவர் விவேகானந்தன் சென்று பார்த்தார். அங்கு நித்யா அணிந்து இருந்த ஆடைகள் கிழிக்கப்பட்டு இறந்து கிடந்தார். அவரது நகைகள் காணாமல் போய் இருந்தன. இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
சிறுவன் அதிரடி கைது
இந்த கொலை தொடர்பாக பரமத்திவேலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கலையரசன் தலைமையில் இன்ஸ்பெக்டர்கள் இந்திராணி, சுரேஷ், ரவிச்சந்திரன் ஆகியோர் கொண்ட மூன்று தனிப்படைகள் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது. இதற்கிடையே கரூர் மாவட்டத்தை சேர்ந்த 17 வயது சிறுவனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். சிறுவனிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையின் போது சிறுவன் போலீசில் அளித்த பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு:-
நான் கரும்பு வெட்டும் வேலைக்காக கரூர் மாவட்டத்தில் இருந்து வந்து இருந்தேன். அப்போது நித்யா தினமும் அந்த வழியாக ஆடு மேய்க்க செல்வார். அவரை கண்டதும் எனக்கு சபலம் ஏற்பட்டது. எப்போதும் நித்யா ஆடு மேய்க்கும் பகுதியில் ஆட்கள் நிற்பார்கள். எனவே ஆட்கள் இல்லாமல் இருக்கும் நேரத்தை நோட்டமிட்டேன்.
கற்பழித்து கொலை
அதன்படி யாரும் இல்லாத நேரத்தில் நான் வலுக்கட்டாயமாக நித்யாவை கற்பழித்தேன். பின்னர் நடந்த சம்பவத்தை வெளியில் சொல்லி விடுவார் என நினைத்து கழுத்தை நெரித்து கொலை செய்தேன். அவர் அணிந்து இருந்த நகைகளை எடுத்துக்கொண்டு ஒன்றும் தெரியாதது போல் அந்த இடத்தில் இருந்து சென்று விட்டேன். அதன்பிறகு போலீசார் என்னை கைது செய்துவிட்டனர்.
இவ்வாறு போலீசில் சிறுவன் வாக்குமூலம் கொடுத்துள்ளார்.
சிறையில் அடைப்பு
மேலும் நித்யாவின் செல்போன் எண் மண்ணுக்குள் புதைத்து வைத்திருந்த இடத்தை போலீசாரிடம் சிறுவன் காண்பித்தான். கொலை செய்தது எப்படி என்பது தொடர்பாகவும் போலீசாரிடம் நடித்து காட்டினான். அதன்பிறகு சிறுவனை பரமத்திவேலூர் சிறையில் ஜேடர்பாளையம் போலீசார் அடைத்தனர்.
பெண்ணை கற்பழித்து கொன்றதாக 17 வயது சிறுவன் கைது செய்யப்பட்ட சம்பவம் பரமத்திவேலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.