மது அருந்த வந்தவரிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு
கொள்ளிடம் அருகே மது அருந்த வந்தவரிடம் 2 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தாய், மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
கொள்ளிடம்:
கொள்ளிடம் அருகே மது அருந்த வந்தவரிடம் 2 பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தாய், மகனை போலீசார் கைது செய்துள்ளனர்.
செயின் பறிப்பு
கொள்ளிடம் அருகே ஓலையாம் புத்தூர் கிராமம் கீழத்தெருவை சேர்ந்த அன்பழகன் மகன் மணிவண்ணன்( வயது 32).இவர் புத்தூரில் உள்ள டாஸ்மாக் மதுபான கடை அருகில், மது பாட்டில் வாங்க நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது இவரின் அருகில் வந்து கொண்டிருந்த திருமயிலாடி கிராமம் தெற்கு தெருவை சேர்ந்த ராஜா என்பவரின் மகன் விஜய்(20) மணிவண்ணனிடம் தகராறில் ஈடுபட்டு அவர் கழுத்தில் அணிந்திருந்த இரண்டு பவுன் தங்க சங்கிலியை திடீரென பறித்துக் கொண்டு ஓடியதாக கூறப்படுகிறது.
இது குறித்து மணிவண்ணன் கொள்ளிடம் போலீசாருக்கு தகவல் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து சங்கிலியை பறித்து சென்ற இளைஞர் விஜய்யை கைது செய்து அவரிடம் இருந்த தங்க சங்கிலியை பறிமுதல் செய்து விசாரணை மேற்கொண்டனர்.
தாய், மகன் கைது
விசாரணையில் விஜய் ஆடு திருட்டு, சைக்கிள் திருட்டு உள்ளிட்ட பல்வேறு திருட்டு செயல்களில் ஈடுபட்டதும், இவரின் அனைத்து திருட்டு செயல்களுக்கும் விஜயின் தாய் மாரியம்மாள் (40) உடந்தையாக இருந்து பாதுகாப்பு அளித்து வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து குற்ற சம்பவங்களுக்கு உடந்தையாக இருந்து வந்த மாரியம்மாளையும் போலீசார் கைது செய்தனர். தாய், மகன் இருவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய போலீசார், இருவரையும் 15 நாள் சிறையில் அடைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டதை தொடர்ந்து இருவரும் சீர்காழி கிளை சிறையில் அடைக்கப்பட்டனர்.