2 வயது ஆண் குழந்தை திடீர் சாவு


2 வயது ஆண் குழந்தை திடீர் சாவு
x
தினத்தந்தி 22 Jan 2023 7:30 PM GMT (Updated: 22 Jan 2023 7:30 PM GMT)

தாரமங்கலத்தில் வயிற்று போக்கால் 2 வயது ஆண் குழந்தை திடீரென இறந்தது. அந்த குழந்தைக்கு உரிய முதலுதவி சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

சேலம்

தாரமங்கலம்:-

தாரமங்கலத்தில் வயிற்று போக்கால் 2 வயது ஆண் குழந்தை திடீரென இறந்தது. அந்த குழந்தைக்கு உரிய முதலுதவி சிகிச்சை அளிக்கவில்லை எனக்கூறி தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

வயிற்றுபோக்கு

சேலம் மாவட்டம், தாரமங்கலம் நகராட்சி 5-வது வார்டு வெட்னி கரடு பகுதியை சேர்ந்தவர் ஈஸ்வரன் (வயது 35), கூலித்தொழிலாளி. இவருடைய மனைவி பிரியா (27). இந்த தம்பதிக்கு திலீப் (2) என்ற ஆண் குழந்தை இருந்தது. இந்த குழந்தைக்கு கடந்த 2 நாட்களாக காய்ச்சல் காரணமாக உடல்நலம் பாதிக்கப்பட்டது.

இதையடுத்து தாரமங்கலத்தில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் குழந்தைக்கு மருத்துவம் பார்த்தனர். நேற்று முன்தினம் இரவு குழந்தைக்கு திடீரென வயிற்று போக்கு ஏற்பட்டது. உடனே தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு குழந்தையை பெற்றோர் சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

சாவு

அங்கு பணியில் இருந்த பெண் டாக்டர் ஒருவர், குழந்தையை பரிசோதனை செய்து விட்டு உடல்நிலை மோசமாக இருப்பதால் மேல் சிகிச்சைக்காக ஓமலூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுமாறு அறிவுறுத்தி உள்ளார். ஆனால் குழந்தையின் பெற்றோர் சேலம் அரசு ஆஸ்பத்திரிக்கு குழந்தையை கொண்டு வந்தனர். அங்கு குழந்தையை ஆஸ்பத்திரியில் அனுமதிக்க சுமார் ஒரு மணி நேரம் தாமதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

அதன்பிறகு சிகிச்சை அளிக்கப்பட்ட சிறிது நேரத்தில் குழந்தை இறந்து விட்டதாக டாக்டர்கள் கூறி விட்டனர். வயிற்று போக்கால் குழந்தை திடீரென இறந்த அதிர்ச்சியில் பெற்றோர் கண்ணீர் விட்டு கதறி அழுதனர். பின்னர் குழந்தையின் உடலை பெற்று கொண்டு வந்து நேற்று முன்தினம் இரவே தாரமங்கலத்தில் அடக்கம் செய்து விட்டனர்.

ஆரம்ப சுகாதார நிலையம் முற்றுகை

இந்த நிலையில் தாரமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் குழந்தைக்கு உரிய முதலுதவி சிகிச்சை அளிக்க தவறியதாக குற்றம் சாட்டி ஈஸ்வரனின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் என 50-க்கும் மேற்பட்டோர் நேற்று ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு திரண்டு வந்தனர். பின்னர் அவர்கள் ஆரம்ப சுகாதார நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

தகவல் அறிந்து வந்த தாரமங்கலம் போலீசார், போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். இதையடுத்து போராட்டம் நடத்தியவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

தாரமங்கலம் ஆரம்ப சுகாதார நிலையத்தை பொதுமக்கள் முற்றுகையிட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


Next Story