வீட்டில் விளையாடியபோது மின்சாரம் தாக்கி 7 மாத குழந்தை பலி
வீட்டில் விளையாடியபோது மின்சார பெட்டியை தொட்ட 7 மாத ஆண் குழந்தை மின்சாரம் தாக்கி பரிதாபமாக இறந்தது.
சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை, மாத்தூர் எம்.எம்.டி.ஏ. 3-வது பிரதான சாலை 87-வது தெருவைச் சேர்ந்தவர் சாம்சன். இவர், தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். இவருடைய மனைவி புஷ்பராணி. இவர்களுக்கு 7 மாதத்தில் ஆண் குழந்தை இருந்தது.
நேற்று காலை சாம்சன் வேலைக்கு சென்று விட்டார். நேற்று மாலை குழந்தை வீட்டின் அறையில் விளையாடிக்கொண்டிருந்தது. புஷ்பராணி, சமையல் அறையில் வேலை செய்து கொண்டிருந்ததாக தெரிகிறது.
அப்போது டி.வி. அருகே இருந்த மின்சார பெட்டியை குழந்தை தொட்டபோது மின்சாரம் தாக்கி மயங்கி விழுந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த புஷ்பராணி, அக்கம் பக்கத்தினர் உதவியுடன் குழந்தையை மீட்டு மணலியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். அங்கிருந்து மேல் சிகிச்சைக்காக சென்னை எழும்பூர் அரசு குழந்தைகள் நல ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள், குழந்தை வரும் வழியிலேயே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
குழந்தையின் உடலை பார்த்து பெற்றோர் கதறி அழுத காட்சி பார்க்க பரிதாபமாக இருந்தது. இது குறித்து மாதவரம் பால்பண்ணை போலீஸ் இன்ஸ்பெக்டர் சங்கர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்.