10 ரூபாய் நாணயம் கொடுத்து டிக்கெட் கேட்ட வாலிபருக்கு அடி-உதை
பரங்கிப்பேட்டை அருகே 10 ரூபாய் நாணயம் கொடுத்து டிக்கெட் கேட்ட வாலிபரை சரமாரியாக தாக்கிய தனியார் பஸ் டிரைவர், கண்டக்டர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பரங்கிப்பேட்டை
10 ரூபாய் நாணயம்
மத்திய அரசால் வெளியிடப்படும் ரூபாய் நோட்டுகள் மற்றும் நாணயங்கள் செல்லும், செல்லாது என்பதை அறிவிக்க அரசுக்குத்தான் உரிமை உள்ளது. ஆனால் சமீபகாலமாக சில இடங்களில் 5 ரூபாய் மற்றும் 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று தாங்களாகவே முடிவு செய்து அவற்றை புறக்கணிக்கும் நிலை வேதனை அளிப்பதாக உள்ளது.
இது ஒரு பக்கம் இருக்க சமூக நலனில் அக்கரை உள்ள வர்த்தக சங்கத்தினர், சமூக ஆர்வலர்கள் வங்கி அதிகாரிகளுடன் சேர்ந்து 10 ருபாய் நாணயத்தை பொதுமக்கள், வியாபாரிகள் வாங்க வேண்டும் என்று விழிப்புணர்வு பிரசாரத்தையும் கையில் எடுத்துள்ளனர். ஆனால் இது பலன் அளித்ததாக தெரியவில்லை. இதை உறுதிப்படுத்தும் வகையில் பரங்கிப்பேட்டை அருகே தனியார் பஸ்சில் 10 ரூபாய் நாணயம் கொடுத்து டிக்கெட் கேட்ட வாலிபரை சரமாரியாக தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுபற்றிய விவரம் வருமாறு:-
தொழிலாளி
பரங்கிப்பேட்டை அருகே உள்ள மண்டபம் அரிய கோஷ்டி கிராமத்தை சேர்ந்தவர் சக்கரபாணி மகன் குமார்(வயது 38). தொழிலாளியான இவர் நேற்று முன்தினம் மாலை புவனகிரியில் இருந்து பரங்கிப்பேட்டைக்கு செல்லும் தனியார் பஸ்ஸில் ஏறினார்.
அப்போது குமார், கண்டக்டர் பணியில் இருந்த வீரமுடையான்நத்தம் கிராமத்தை சேர்ந்த கார்த்திக்கிடம் 10 ரூபாய் நாணயத்தை கொடுத்து டிக்கெட் கேட்டார். ஆனால் அவரோ 10 ரூபாய் நாணயம் செல்லாது என்று கூறி வாங்க மறுத்ததாக தெரிகிறது. இதனால் அவர்களுக்கிடையே கடும் வாய் தகராறு ஏற்பட்டது. ஆனால் குமாரும் வேறு ருபாய் கொடுத்து டிக்கெட் எடுக்க மறுத்தார்.
சரமாரி தாக்குதல்
இந்த நிலையில் பஸ் பரங்கிப்பேட்டை அகரம் ரெயிலடி பஸ் நிறுத்தம் அருகில் வந்து நின்றபோது திடீரென கண்டக்டர் கார்த்திக், டிரைவர் கோவிலாம் பூண்டியை சேர்ந்த ரவி ஆகிய இருவரும் சேர்ந்து குமாரை சரமாரியாக திட்டி தாக்கியதாக கூறப்படுகிறது. இதில் படுகாயம் அடைந்த குமாரை சக பயணிகள் சிகிச்சைக்காக பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு டாக்டர்கள் சிகிச்சை அளித்து வருகிறார்கள்.
இது குறித்த புகாரின்பேரில் டிரைவர் ரவி, கண்டக்டர் கார்த்திக் ஆகியோர் மீது பரங்கிப்பேட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் துரை ஆகியோர் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றார்.
ஓடும் பஸ்சில் 10 ரூபய் நாணம் கொடுத்து டிக்கெட் கேட்ட வாலிபரை டிரைவர், கண்டக்டர் இவரும் சேர்ந்து தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.