பாலீஷ் போட்டு தருவதாக கூறி மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு


பாலீஷ் போட்டு தருவதாக கூறி மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலி பறிப்பு
x

பெண்ணாடம் அருகே பாலீஷ் போட்டு தருவதாக கூறி மூதாட்டியிடம் 6 பவுன் சங்கிலியை பறித்து விட்டு தப்பி ஓட முயன்ற வடமாநில வாலிபரை பொதுமக்கள் துரத்தி பிடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடலூர்

பெண்ணாடம்,

பாத்திரங்களுக்கு பாலீஷ்

பெண்ணாடம் அருகே உள்ள எடையூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் பாலன் மனைவி அங்கம்மாள்(வயது 60). இவர் நேற்று மதியம் வீ்ட்டில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் பித்தளை பாத்திரங்களுக்கு பாலீஷ் போட்டு தருவதாக கூறியுள்ளனர். இதற்கு அங்கம்மாள் வேண்டாம் என மறுத்துள்ளார்.

ஆனாலும் அந்த மர்ம நபர்கள் விடாமல் அங்கம்மாளை வற்புறுத்தி தங்கள் கண் எதிரே அலுமினிய பாத்திரத்துக்கு பாலீஷ் போட்டுக்கொண்டிருந்தனர். அப்போது அவர்களில் ஒருவன் அங்கம்மாளிடம் காலில் இருந்த மெட்டியை கழற்றி கொடுங்கள் பாலீஷ் போட்டு தருகிறேன் என கூறியபடியே அவரது கையில் ஒருவகையான பொடியை கொட்டியுள்ளான்.

6 பவுன் சங்கிலி பறிப்பு

இதை உணர்ந்த அங்கம்மாள் பயந்து போனார். அப்போது மர்ம நபர்களில் ஒருவன் திடீரென அவரது கழுத்தில் கிடந்த 6 பவுன் சங்கிலியை பறித்தான். இதனால் சுதாரித்துக் கொண்ட அங்கம்மாள் திருடன் திருடன் என கூச்சலிட்டார்.

இந்த சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். இதைப்பார்த்து மோட்டார் சைக்கிளில் தயாராக நின்ற மர்ம நபர் அங்கிருந்து மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டான். தங்க சங்கிலியுடன் தப்பி ஓட முயன்ற இன்னொரு நபரை பொதுமக்கள் பின்னால் துரத்தி சென்று மடக்கிப்பிடித்தனர்.

வடமாநில வாலிபர் கைது

இது பற்றிய தகவல் அறிந்த வந்த பெண்ணாடம் போலீசார் பிடிபட்ட வாலிபரிடம் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் பீகார் மாநிலத்தை சேர்ந்த தாரிக்ஷா மகன் பிபின் குமார்(33) என்பதும், தப்பி ஓடிய தனது நண்பனுடன் சேர்ந்து மூதாட்டியிடம் தங்க சங்கிலியை பறித்ததும் தெரியவந்தது.

இதையடுத்து பிபின்குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்த 6 பவுன் சங்கிலியையும் பறிமுதல் செய்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து அங்கம்மாள் கொடுத்த புகாரின் பேரில் பெண்ணாடம் போலீசார் தப்பி ஓடிய பிபின்குமாரின் நண்பனை வலைவீசி தேடி வருகிறார்கள். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்பு உண்டா

இதற்கிடையே நேற்று சிறுபாக்கம் அருகே விநாயகநந்தல் கிராமத்தை சேர்ந்த மூதாட்டியிடம் நகைக்கு பாலீஷ் போட்டு தருவதறாக கூறி 5 பவுன் சங்கிலியை இருசக்கர வாகனத்தில் வந்த 2 மர்ம நபர்கள் அபேஸ் செய்துள்ளனர். அந்த சம்பவத்துக்கும் இந்த வாலிபர்களுக்கும் தொடர்பு உண்டா என்பது குறித்தும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள்.


Next Story