பெண்கள் விடுதியில் புகுந்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் கைது


பெண்கள் விடுதியில் புகுந்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை; தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் கைது
x

பெண்கள் விடுதியில் புகுந்து கல்லூரி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்த தனியார் ஆஸ்பத்திரி ஊழியர் கைது செய்யப்பட்டார்,

சென்னை

சென்னை தியாகராயநகரில் உள்ள தனியார் ஆஸ்பத்திரியில் பணிபுரிந்து வந்தவர் ஸ்ரீகாந்த் (வயது 22). திருவண்ணாமலையை சேர்ந்த இவர், மயக்கவியல் படிப்பில் 'டிப்ளமோ' முடித்துள்ளார். போதைக்கு அடிமையானவர். கீழ்ப்பாக்கத்தில் உள்ள ஆண்கள் விடுதி ஒன்றில் தங்கியிருந்து பணியாற்றி வந்தார்.

இவர், அதே பகுதியில் உள்ள பெண்கள் விடுதியில் புகுந்து ஏற்கனவே ஒரு பெண்ணுக்கு பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். அதுதொடர்பாக புகார் எதுவும் கொடுக்கப்படவில்லை.

இந்த நிலையில் போதை மயக்கத்தில் இருந்த ஸ்ரீகாந்த் நேற்று அதிகாலையில் அதே பெண்கள் விடுதிக்குள் சுவர் ஏறி குதித்து நுழைந்தார். விடுதியில் உள்ள ஒரு அறையில் படுத்து தூங்கிய கல்லூரி மாணவியை கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்து பாலியல் தொல்லை கொடுத்துள்ளார். மாணவி சத்தம் போடவே, அவர் சுவரை தாண்டி குதித்து தப்பி ஓடிவிட்டார். ஆனால் அவரது செல்போனை விடுதியில் விட்டு சென்றுவிட்டார்.

செல்போனை எடுப்பதற்காக ஸ்ரீகாந்த் மீண்டும் அந்த பெண்கள் விடுதிக்கு சென்றபோது அங்கு கூடியிருந்த பெண்கள் ஸ்ரீகாந்தை பிடித்து கீழ்ப்பாக்கம் போலீசில் ஒப்படைத்தனர். ஸ்ரீகாந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் நீதிமன்ற காவலில் அவர் சிறையில் அடைக்கப்பட்டார்.


Next Story