அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணிக்கான ஆலோசனை கூட்டம்


அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணிக்கான ஆலோசனை கூட்டம்
x

கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் அட்டையுடன் ஆதார் இணைக்கும் பணிக்கான ஆலோசனை கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

திருவள்ளூர்

திருவள்ளூரில் உள்ள மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்ட அரங்கில் நேற்று மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான டாக்டர் ஆல்பி ஜான் வர்கீஸ் தலைமையில் திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடன் வாக்காளர் அடையாள அட்டையோடு ஆதார் எண்ணை இணைக்கும் பணிகள் தொடர்பான விளக்க கூட்டம் மற்றும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

இந்த கூட்டத்தில் கலெக்டர் பேசியதாவது:-

இந்த திட்டம் கடந்த 1-ந் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. அனைத்து வாக்காளர்களிடம் இருந்து ஆதார் எண்ணை பெற்று வாக்காளர் பட்டியல் உடன் இணைக்கும் பணி வாக்காளர் பதிவு அலுவலர்களால் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

அதன் அடிப்படையில் மாவட்டத்தில் உள்ள 10 சட்டமன்ற தொகுதிகளிலும் 3,657 வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டு உள்ளனர். இந்த பணியினை கண்காணித்திட அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் மேற்பார்வையாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இந்த பணியினை கண்காணித்திட துணை கலெக்டர் தலைமையில் கண்காணிப்பு அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். எனவே பொதுமக்கள் வீடு தேடி வரும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் தங்கள் ஆதார் எண்ணை படிவம் 6-பி மூலம் தெரிவித்துக் கொள்ளலாம்.

வாக்காளர்களும் தாங்களே நேரடியாக தங்களது ஆதார் எண்ணை வாக்காளர் பட்டியலுடன் படிவம் 6-பி யை ஆன்லைன் மூலம் பதிவு செய்து கொள்ளலாம். இந்த பணி சிறப்பாக நடைபெற அனைத்து அரசியல் கட்சி பிரதிநிதிகள் தங்களின் மேலான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

இந்த கூட்டத்தில் பல்வேறு அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) முரளி, தனித் தாசில்தார் (தேர்தல்) செல்வம் மற்றும் அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.


Next Story