வெளியூர் தப்பி செல்ல முயன்ற தம்பதி சிக்கினர்


வெளியூர் தப்பி செல்ல முயன்ற தம்பதி சிக்கினர்
x

ஈரோடு தொழில் அதிபரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த தம்பதி வெளியூர் தப்பி செல்ல முயன்ற போது சிக்கினர்.

விருதுநகர்

சிவகாசி

ஈரோடு தொழில் அதிபரிடம் ரூ.12 லட்சம் மோசடி செய்த தம்பதி வெளியூர் தப்பி செல்ல முயன்ற போது சிக்கினர்.

தொழில் அதிபர்

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சி தாலுகாவை சேர்ந்தவர் சின்னசாமி மகன் ரமேஷ் (வயது 41). தொழில் அதிபர். சிவகாசி அருகே உள்ள ஆலங்குளத்தை சேர்ந்த கார்த்தி மனைவி பேச்சியம்மாள் (31) என்பவர் பேஸ்புக் மூலம் ரமேசிடம் அறிமுகம் ஆகி உள்ளார். பின்னர் தன்னிடம் பழைய தங்க நகைகள் இருப்பதாகவும், அதனை குறைந்த விலைக்கு விற்பனை செய்ய இருப்பதாகவும் பேச்சியம்மாள், ரமேசிடம் கூறி உள்ளார்.

இதனை உண்மை என நம்பிய ரமேஷ் தனது நண்பர்கள் 2 பேருடன் கடந்த 3 நாட்களுக்கு முன்னர் சிவகாசிக்கு வந்து வங்கி மூலம் பணத்தை பேச்சியம்மாள் வங்கி கணக்குக்கு அனுப்பி உள்ளார். ரூ.12 லட்சத்து 58 ஆயிரத்தை பெற்ற பேச்சியம்மாள் பஸ் நிலையம் அருகில் உள்ள வங்கியின் முன்பு ரமேசை நிற்க வைத்துவிட்டு சிறிது நேரத்தில் திடீரென தலைமறைவானார். இது குறித்து ரமேஷ் சிவகாசி டவுன் போலீசில் புகார் கொடுத்தார். அந்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

தனிப்படை

இந்த சம்பவம் குறித்து சிவகாசி துணை போலீஸ் சூப்பிரண்டு தனஞ்செயன், பேச்சியம்மாளை பிடிக்க சப்-இன்ஸ்பெக்டர் செல்வராஜ் தலைமையில் தனிப்படை அமைத்தார். இந்த தனிப்படையினர் பேச்சியம்மாள் செல்போன் சிக்னலை கொண்டு பல்வேறு இடங்களில் அவரை தேடினர். இதற்கிடையில் சிவகாசி-ஸ்ரீவில்லிபுத்தூர் ரோட்டில் போலீசார் வாகன சோதனை செய்த போது பேச்சியம்மாள் தனது கணவர் கார்த்தியுடன் காரில் வந்து கொண்டிருந்தார்.

போலீசார் அவர்கள் 2 பேரையும் தனியாக அழைத்து விசாரணை நடத்தினர். பின்னா் அவர்களை சிவகாசி டவுன் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தனர்.

வெளியூர் தப்பி செல்ல

பின்னர் இருவரிடமும் போலீசார் தனித்தனியாக விசாரணை நடத்தினர். விசாரணையில் ஈரோடு தொழில் அதிபர் ரமேசிடம் பணத்தை வங்கி கணக்கு மூலம் பெற்ற பின்னர் தனது வங்கி கணக்கில் இருந்து கணவர் கார்த்தி உதவியுடன், பேச்சியம்மாள் பணத்தை வங்கியில் இருந்து எடுத்துள்ளார்.

பின்னர் ரமேசை சிவகாசி பஸ் நிலையம் அருகில் நிற்க வைத்துவிட்டு கணவருடன் வீட்டிற்கு சென்றுள்ளார். தனது செல்போனை சுவிட்ச்ஆப் செய்துவிட்டு அங்கிருந்து காரில் தூத்துக்குடி சென்றுள்ளார்.

பின்னர் சிவகாசி அருகே உள்ள ஆலங்குளம் வந்து, வீட்டில் இருக்கும் மீதி பணத்தை எடுத்துக் கொண்டு மூணாறு செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதற்கிடையில் அவர்கள் இருவரும் சிக்கி கொண்டனர். அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.


Related Tags :
Next Story