கிரிக்கெட் வீரர் நடராஜன் பெயரில் கிரிக்கெட் மைதானம்
சேலம் அருகே சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் வீரர் நடராஜன் பெயரிலான கிரிக்கெட் மைதானத்தை தினேஷ் கார்த்திக் திறந்து வைத்தார்
சேலம் அருகே சின்னப்பம்பட்டியில் கிரிக்கெட் வீரர் நடராஜன் பெயரிலான கிரிக்கெட் மைதானத்தை தினேஷ் கார்த்திக் திறந்து வைத்து பாராட்டினார்.
கிரிக்கெட் மைதானம்
'யார்க்கர் மன்னன்' என்று அழைக்கப்படும் இந்திய கிரிக்கெட் அணியின் இடக்கை வேகப்பந்து வீச்சாளர் டி.நடராஜன். ஐ.பி.எல். கிரிக்கெட்டில் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணிக்காகவும், டி.என்.பி.எல். கிரிக்கெட்டில் பால்சி திருச்சி அணிக்காகவும் விளையாடுகிறார். தனது சொந்த ஊரான சேலம் மாவட்டம் சின்னப்பம்பட்டியில் சகல வசதிகளுடன் ஒரு கிரிக்கெட் மைதானம் அமைக்க வேண்டும் என்பது நடராஜனின் கனவாகும்.
இதன்படி 4 பிட்சுகள், 2 பயிற்சி தடங்கள், ஜிம், கேண்டீன் மற்றும் போட்டியை காண 100 பேர் அமரக்கூடிய இருக்கையுடன் கூடிய ஒரு மைதானத்தை கட்டியிருக்கிறார். நடராஜன் கிரிக்கெட் அகாடமி சார்பில் அவரது பெயரில் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானத்தின் திறப்பு விழா நேற்று நடந்தது.
விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக் கலந்து கொண்டு மைதானத்தை திறந்து வைத்தார். அவர் பேசியதாவது:-
நடராஜன் மிகவும் சுவாரஸ்யமான ஒரு மனிதர். அவரின் கிரிக்கெட் பயணம் சாதாரணமான ஒன்று அல்ல. அடிமட்டத்தில் இருந்து படிப்படியாக முன்னேறிய அவரது இந்த பயணம் மற்றவர்களுக்கு ஊக்கம் கொடுக்கும். பலரும் கிரிக்கெட்டில் வளர்ந்த பிறகு தங்களுக்கு உதவியவர்களை மறந்து விடுவார்கள். ஆனால் நடராஜன் அப்படி இல்லை. தனக்கு உதவியவர்களை மறக்காமல் நினைவில் வைத்துள்ளார். அது தான் அவரிடம் எனக்கு பிடித்த விஷயமாகும். அதற்கு அவரது பயிற்சியாளர் ஜே.பி இன்றும் கூட அவர் அருகில் இருப்பதே சான்றாகும்.
டோனிக்கு பிறகு...
சின்ன ஊரிலிருந்து வந்து பெரிய அளவில் சாதிக்க முடியும் என்பதை முதல்முதலில் நிரூபித்தவர் டோனி. அவரை போல் சிறிய ஊரில் இருந்து வந்து கிரிக்கெட் அரங்கில் தாக்கத்தை ஏற்படுத்தியவர் நடராஜன். சமீபத்தில் நடந்த ஐ.பி.எல். தொடருக்கு பின்னர் நடராஜன் ஏன் இந்திய அணிக்காக விளையாடவில்லை? என்று ஆஸ்திரேலிய முன்னாள் வீரர்கள் மேத்யூ ஹைடனும், பாண்டிங்கும் என்னிடம் கேட்டனர். அந்த அளவுக்கு அவர் தாக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறார். அது தான் அவரது தனிச்சிறப்பு.
இந்திய அணிக்காக நான் நீண்ட காலமாக விளையாடி இருக்கிறேன். எனக்கு கூட இப்படி ஒரு மைதானத்தை கட்ட வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது இல்லை. ஆனால் தன்னை போன்று கஷ்டப்படும் வீரர்கள் முன்னேற வேண்டும் என்பதற்காக நடராஜன் இதனை செய்து காட்டியுள்ளார். அந்த வகையில் அவரை நினைத்து பெருமைப்படுகிறேன்.
இவ்வாறு தினேஷ் கார்த்திக் பேசினார்.
நடராஜன் பேச்சு
கிரிக்கெட் வீரர் 32 வயதான நடராஜன் பேசுகையில், 'திறமையான வீரர்கள் நகர்புறத்தில் இருந்தாலும், சிறிய குக்கிராமத்தில் இருந்தாலும் தங்கள் திறமையால் முன்னுக்கு வர முடியும் என்பதுதான், அனுபவபூர்வமாக நான் கண்ட உண்மை. அதற்கு நானே உதாரணம். வருங்கால இளைஞர்கள் விடாமுயற்சியுடன் அர்ப்பணிப்புடன் செயல்பட்டு பல சாதனைகள் புரிய வேண்டும். இந்த மைதானத்தை கட்டியதன் மூலம் எனது நீண்ட கால கனவு நிறைவேறி உள்ளது' என்றார்.
விழாவில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சிவகுமார், தமிழ்நாடு கிரிக்கெட் சங்க தலைவர் அசோக் சிகாமணி, செயலாளர் பழனி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் தலைமை செயல் அதிகாரி காசி விஸ்வநாதன், கிரிக்கெட் வீரர்கள் வாஷிங்டன் சுந்தர், வருண் சக்கரவர்த்தி, விஜய் சங்கர், சாய் கிஷோர், நடிகர்கள் யோகிபாபு, படவா கோபி, புகழ் மற்றும் நடராஜனின் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் கலந்து கொண்டனர்.